பழமையான கோயில்கள் போன்று தற்போது கட்ட முடியாது: உயர்நீதிமன்றம்!

public

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்களை போல கட்ட முடியாது என்பதால், பழமையான கோயில்களை முறையாக புனரமைத்து பாதுகாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோயிலில் ஓவியங்கள் அழிக்கப்பட்டு வெள்ளையடிக்கப்படுவதாகவும், நாமக்கல் சோளீஸ்வரர் கோயிலின் பழமையான கற்கள் உடைக்கப்படுவதாகவும், இதேபோல் திருவெள்ளறை கோயிலும் சேதப்படுத்தப்படுவதாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், ஈரோட்டில் உள்ள கோயில் ஒன்றின் மண்டபம் இடிக்கப்பட்ட விவகாரத்தில் கோயிலின் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்களை போல அற்புதமான கட்டுமானத்துடனும், சிறந்த தொழில்நுட்பத்துடனும், முறையான ஆகம விதிப்படியும் கட்ட முடியாது. அதனால் பழமையான கோயில்களை முறையாக புனரமைத்து, சிறப்பாக பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதையடுத்து, மனுதாரரின் புகார்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *