இந்தோனேசியாவில் இன்று காலை 7.6 ரிக்டர் அளவிற்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் உள்ள தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி நகர்வதால் நிலநடுக்கம் உருவாகிறது. குறிப்பாக இந்தோனேசியா பசிபிக் கடலில் உள்ள நெருப்பு வளையங்கள்(Ring of Fire) மீது அமைத்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் ஏற்படுகிறது.
**2004**
கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள கடற்பகுதியில் அதிகாலை வேளையில் 9.1 முதல் 9.3 அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, இந்திய பெருங்கடல், வங்கக்கடல் பகுதிகளில் சுனாமி உண்டானது. சுனாமி அலைகள் சுமார் 100 அடி உயரத்துக்கு எழுந்தன. இதனால் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். இந்த சுனாமியால் 14க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, சென்னை, நாகப்பட்டினம், வேளாங்கன்னி ஆகிய பகுதிகளில் சுனாமியால் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு நடந்து பல ஆண்டுகள் ஆனாலும் சுனாமி என்கிற வார்த்தையும், டிசம்பர் 26ஆம் தேதியும் அனைவரின் உள்ளத்திலும் உள்ளது. அதை நினைத்தால் தற்போதும் ஒருவித அச்சம் ஏற்படுகிறது. இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வரவே மக்களுக்கு பல மாதங்கள் தேவைப்பட்டன.
**2018**
2018ஆம் ஆண்டு மீண்டும் இந்தோனேசியாவின் சுலவேஸி என்ற தீவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியா வானிலை மையம், 3-4 மீட்டர் அளவுக்கு சுனாமி அலை வரலாம் என்று எச்சரிக்கை விடுத்தது. ஆனால் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. ஆனால், எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்ட பிறகுதான் சுனாமி ஏற்பட்டது. இதில் 384 பேர் உயிரிழந்ததாக இந்தோனேசியா பேரிடர் குழு தெரிவித்தது.
இந்நிலையில் இன்று(டிசம்பர் 14) காலை இந்தோனேசியாவின் மெளமர் நகரின் வடக்குப்பகுதியிலிருந்து 100 கி.மீ தொலைவில் இருக்கும் திமோர் நகரின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் ப்ளோரஸ் தீவின் கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.6 ரிக்டர் அளவிலும், 12 கிலோமீட்டர் ஆழத்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலோரப் பகுதிகளில் அபாயகரமான சுனாமி அலைகள் தாக்கும் சாத்தியம் உள்ளது என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து சேதமோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை. இருப்பினும் அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நிலநடுக்கம் குறித்து இந்தோனேசிய மக்கள் கூறுகையில், “நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் பீதியில் எங்கே போவது என்று தெரியாமல் ஓடினோம். பலரும் வீடுகளிலிருந்து வெளியே ஓடி வந்தார்கள். தற்போதுவரை எங்களுக்கு பயம் போகவில்லை” என்று கூறினர்.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்தது. இந்நிலையில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை என இந்திய சுனாமி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
**-வினிதா**
�,”