கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கிராமப்புறங்கள் மட்டுமின்றி, நகர்ப்புறங்களிலும் கணிசமான மக்கள் மண்பானை குடிநீரில் ஆர்வம்காட்டுகின்றனர். தற்போது மண்பானைகளின் மகத்துவம் பற்றிய விழிப்புணர்வு காரணமாக, மக்கள் மீண்டும் மண்பானை சமையலுக்கு மாறி வருகின்றனர். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு, பணத் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை. தற்போது கோடைக்காலம் நெருங்கும் நிலையில் இந்த ஆண்டாவது விற்பனை அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் மண்பானை உற்பத்தியாளர்கள்.
இதுகுறித்து பேசியுள்ள திருப்பூர் மாவட்ட மண்பாண்ட உற்பத்தியாளர்கள், “மண்பாண்டங்கள் உற்பத்திக்கு தேவையான களிமண்ணை நீர்வழித்தடங்கள் ஓடைகளில் இருந்து சரக்கு வாகனத்தின் மூலமாக எடுத்து வருகிறோம். பின்பு அந்த மண்ணை சலித்து சுத்தப்படுத்தி வெயிலில் காய வைப்போம். நன்றாக காய்ந்த பின்பு மணலில் கலந்து தண்ணீர் ஊற்றி பிசைந்து ஊற வைப்போம். இதையடுத்து அதை நன்றாக மிதித்து பக்குவப்படுத்தி மரச் சக்கரத்தின் மையப்பகுதியில் வைத்து தேவையான உருவங்களில் பானைகளை வடித்தெடுப்போம். அதைத் தொடர்ந்து அதன் உருவத்தை ஒழுங்குபடுத்தி நிழலில் உலர்த்தி வெயிலில் காயவைத்து அதன் பின்பு தீ மூட்டி பக்குவப்படுத்தி உருவத்தையும் உறுதித் தன்மையையும் இறுதி செய்கிறோம்.
இவ்வாறாக நாளொன்றுக்கு 20 பானைகள் தயாரிக்க முடியும். ஆனால், மண் எடுத்து வருகின்ற செலவு, உற்பத்தி கூலி போன்றவை கழித்தால் ரூ.300 மட்டுமே கிடைக்கும். இதனால் ஏராளமானோர் மண்பாண்டத் தொழிலை கைவிட்டு விட்டு வேறு தொழில்களுக்குச் சென்றுவிட்டனர். அரசு நிதியுதவி அளித்தால் ஊக்கத்தோடு உற்பத்தியில் ஈடுபட முடியும். இதனால் மண்பாண்டங்கள் உற்பத்தி தொழிலும் புத்துயிர் பெறும்.
தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் மண்பானைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு, பணத் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை. இந்த ஆண்டு விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.
**-ராஜ்**
.