ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் புறநகர் மின்சார ரயில் சேவை 50 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 8981 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 4,531 பேரும், செங்கல்பட்டில் 1,039 பேரும், கோவையில் 408 பேரும், காஞ்சிபுரத்தில் 257 பேரும், வேலூரில் 216 பேரும், திருச்சியில் 184 பேரும், திருவள்ளூரில் 514 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று எட்டு பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒமிக்ரான் புதிதாக பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை.
இவ்வாறு ஜெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இரவுநேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவைகள் மட்டுமே இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கின்போது பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், வழக்கம்போல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் மெட்ரோ ரயில் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புறநகர் ரயில் சேவை இருக்குமா என்று கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”சென்னையில் 4 வழித்தடங்களில் 600க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி 300 ரயில்களை இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
வழக்கம் போல அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சார ரயில் சேவை நடைபெறும். ரயில்களில் பயணம் செய்வதற்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. கொரோனா முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய பணியில் ஈடுபடக்கூடிய அரசு, தனியார் ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அவசர பயணம் மேற்கொள்ளக்கூடியவர்கள் மின்சார ரயிலில் பயணம் செய்யலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**ரேஷன் கடைகள் இயங்காது**
முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமையன்று ரேஷன் கடைகள் செயல்படாது. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பொங்கல் பரிசு பெற டோக்கன் பெற்ற அட்டைதாரர்களுக்கு 13ஆம் தேதிக்கு முன்பாக வினியோகம் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,