}இன்னும் ஏன் தக்காளி விலை குறையவில்லை?: நீதிபதி!

Published On:

| By Balaji

கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிகளை நிறுத்த இடமளித்தும் பெருமளவில் விலை குறையவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பர் மாதத்தில் பெய்த தொடர்கனமழை காரணமாக வெளிமாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்தது. இதனால் தமிழ்நாட்டில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. ஒருகிலோ தக்காளி ரூ.150க்கும் மேல் விற்கப்பட்டு வந்தது. இதையடுத்து தக்காளி விலையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதற்கிடையில் கோயம்பேடு சந்தையில் கொரோனா காரணமாக மூடப்பட்ட தக்காளி மைதானத்தை திறக்க வேண்டும். அதை திறப்பதன் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளிகளை லாரியில் கொண்டு வந்து இறக்கி, குறைந்த விலையில் மக்களுக்கு தக்காளியை விற்பனை செய்ய முடியும் என்று தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சுரேஷ்குமார் தக்காளி விலை குறையும் வரை பொதுநலன் கருதி கோயம்பேடு சந்தையில் தக்காளிகளை லாரிகள் மூலம் கொண்டுவந்து இறக்குவதற்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று மார்க்கெட் கமிட்டி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு உத்தரவிட்டது. அதன்படி இடமும் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்காமல், 50.1 செண்ட் நிலம் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மார்க்கெட் கமிட்டி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தக்காளி லாரிகளை நிறுத்துவதற்கு 94 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. தக்காளி இறக்கும் இடத்தில் விற்பனை செய்ய கூடாது என உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு அறிக்கைகளையும் ஆய்வு செய்த நீதிபதி, ஒதுக்கப்பட்ட இடத்தில் தக்காளி இறக்குவதை தவிர, வேறு எந்த பணியும் நடைபெறாமல் இருப்பதை வியாபாரிகள் உறுதிசெய்ய வேண்டும். அப்படி நடந்தால் அதற்கு மனுதாரர் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் லாரிகளில் வரும் தக்காளியை இறக்கி ஏற்றுவதற்கான இடம் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையிலும், தக்காளி விலை ஏன் பெருமளவில் குறையவில்லை என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வியாபாரிகள் சங்கம், தென் மாநிலங்களில் கன மழை காரணமாக விளைச்சல் இல்லை. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்தும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதுதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லாவிட்டாலும் ஓரளவு விலை குறைந்துள்ளது. அதனால், தக்காளி மார்கெட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பொங்கல் வரை பயன்படுத்துவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதி, விலையை கட்டுப்படுத்த கூடுதல் எண்ணிக்கையில் லாரிகளை வரவழைக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.

தக்காளி இறக்கி ஏற்றும் இடத்தில் சில்லறை மற்றும் மொத்த விற்பனை செய்யக் கூடாது. இந்த உத்தரவை மீறும் வாகனங்களை உள்ளே அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share