வீடு தேடி வரும் ரேஷன் திட்டத்துக்கு மத்திய அரசு மறுப்பது ஏன்?

Published On:

| By Balaji

டெல்லியில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு ரேஷன் பொருள்களை மக்களின் வீடுகளுக்கே நேரடியாகச் கொண்டு சேர்க்கும் மாநில அரசின் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தடையாக உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னதாக தேர்தல் நேரத்தில் அக்கட்சி முன்வைத்திருந்த 28 அம்ச வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அரசு துரிதமாக நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில், அக்கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான (Door Step Delivery of Ration Scheme) வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தை மாநிலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரும் பொருட்டு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கடந்தாண்டு அமைச்சரவையில் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நோய்த்தொற்று பரவலைக் கருத்தில்கொண்டு மாநில அரசின் இந்தத் திட்டத்துக்கு மக்கள் மத்தியிலும், எதிர்க்கட்சிகள் மத்தியிலும்கூட வரவேற்பு கிடைத்தது. இந்தத் திட்டமானது டெல்லியில் கடந்த மார்ச் மாதம் முதல் நடைமுறைப்படுத்த மாநில அரசால் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மத்திய நுகர்வோர் உணவு மற்றும் பொது விநியோகத்துறை இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடைமுறைக்குக் கொண்டுவருவதில் கால தாமதமானது. ‘டெல்லி அரசின் இந்தத் திட்டம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் சாரங்களை நீர்த்துப் போகச் செய்து விடும்’ எனப் பொது விநியோகத்துறை அதிருப்தி தெரிவித்ததால் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

அதையடுத்து, முதல்வர் கெஜ்ரிவால் மத்திய அரசுக்குத் திட்டம் தொடர்பாக கடிதம் எழுதினார். அவரின் கடிதத்துக்குப் பதிலளித்த மத்திய அரசு, ‘மானிய விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுப் பொருட்களை மாநில அரசுகள் வீடு வீடாக விநியோகிப்பதற்கு அனுமதி வழங்க முடியாது’ என்று கூறி ஆட்சேபம் தெரிவித்தது.

மேலும், அப்படியே வழங்குவது என்றாலும் ‘முக்கிய மந்திரி கர் கர் ரேஷன் யோஜனா’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தக் கூடாதென்றும் மத்திய அரசு கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிவித்த கெஜ்ரிவால், “மத்திய அரசுக்கு ‘முக்கிய மந்திரி’ என்ற வார்த்தையினை நாங்கள் பயன்படுத்துவது பிடிக்கவில்லை. நாங்கள் பெயருக்காகவோ, புகழுக்காகவோ இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. மக்கள் நலனுக்காகவே செய்கிறோம். அதனால் இந்தத் திட்டத்துக்கு எந்தப் பெயரும் வைக்காமலே மத்திய அரசிடம் ஒப்புதலுக்கு அனுப்பவிருக்கிறோம்.

நாங்கள் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதின் முக்கிய காரணமே நடைமுறையில் இருக்கும் திட்டத்தில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ‘ரேஷன் மாஃபியா’ கும்பலை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான். மக்களின் நெடுங்கால கனவான இந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர நான் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறேன். இந்தத் திட்டம் மார்ச் 25ஆம் தேதி முதல் மாநிலத்தில் அமலுக்கு வரும். முதற்கட்டமாக டெல்லியின் சீமாபுரி பகுதியில் 100 குடும்பங்களுக்கு வழங்கி திட்டத்தைத் தொடங்கவிருக்கிறோம்” என்று மார்ச் மாதம் செய்தியாளர்கள் சந்திப்பில் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

ஆனால், மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கப்பெறாததாலும், நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடந்து வருவதை காரணம் காட்டி மாநில துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்காததாலும், ‘வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கும் திட்டம்’ முதல்வர் குறிப்பிட்ட தேதியில் நடைமுறைக்கு வராமல் போனது.

இந்த நிலையில், இது தொடர்பாக காணொலிக் காட்சி வாயிலான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “மக்களின் நீண்ட நாள் கனவு திட்டத்தினை நாங்கள் பல்வேறு நிர்வாகச் சிக்கல்களுக்கும் மத்தியில் நிறைவேற்றத் துடிக்கிறோம். ஆனால் மத்திய அரசு அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்தத் திட்டமானது ரேஷன் கடைகளுக்கு வெளியே மக்கள் காத்திருப்பதைத் தவிர்க்கும். கொரோனா நோய்த்தொற்றின் அச்சம் காரணமாக வீட்டை விட்டு வெளியே வருவதற்கு பெரும்பாலான மக்கள் அச்சப்படுகின்றனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமலில் இருப்பதால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். ஆனாலும், வெளியே சென்றால் கொரோனா தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். வயதானவர்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை.

இத்தகைய மக்கள் நலன் சார்ந்த திட்டத்துக்கு மத்திய அரசு ரேஷன் மாஃபியாக்களின் உந்துதலின் பேரில் ஒப்புதல் அளிக்காமல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திட்டம் நடைமுறைக்கு வர இரண்டு நாள்களே இருந்த நிலையில் மத்திய அரசு இதை நிறுத்திவிட்டது. பீட்சா, பர்கர், ஸ்மார்ட்போன், துணிமணிகள் என அனைத்து பொருள்களையும் இந்தியாவில் டெலிவரி செய்யலாம். ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யக்கூடாதா?

மத்திய அரசு திட்டத்துக்கு நாங்கள் அனுமதி கோரவில்லை என்று கூறுகிறது. ஆனால், எங்கள் மாநிலத்தில் நாங்கள் எங்களின் மக்களுக்குத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசின் அனுமதி எங்களுக்குத் தேவையில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இருப்பினும், சர்ச்சைகளைத் தவிர்க்கவும் அது முறையாக இருக்காது என்பதாலும், மத்திய அரசிடம் முறையாக ஐந்து முறை அனுமதி கோரினோம்.

மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், டெல்லி என அனைவரிடமும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசு விவசாயிகள் விவகாரத்திலும், லட்சத்தீவு பிரச்சினையிலும் கூட எதிராகவே இருக்கிறது. மக்கள் மத்திய அரசின் மீது அதிருப்தியில் இருக்கின்றனர். மத்திய அரசு இந்த நேரத்தில் மாநில அரசுகளுடன் மோதிக்கொண்டிருந்தால் கொரோனாவை எதிர்த்துப் போராட முடியாது.

எனவே, டெல்லியில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு என்னை அனுமதிக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் ஆம் ஆத்மி கட்சிக்கோ, பாஜகவுக்கோ சொந்தமானது அல்ல; மக்களுக்கானது. 70 லட்சம் மக்களின் சார்பாகக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கிறேன். தயவுசெய்து இந்த திட்டத்தை நிறுத்த வேண்டாம். இது தேசத்தின் நலனுக்கானது. நாட்டின் நலனுக்காகக் கூறப்படும் விஷயத்தில் எந்த அரசியலும் இருக்கக் கூடாது என்று பேசியுள்ளார்.

நோய்த்தொற்று காலத்தில் மக்கள் நலனைக் கருத்தில் கண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டமாக டெல்லி அரசின் இந்தத் திட்டம் இருப்பதால் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் அனுமதி அளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுதொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

**-ராஜ்**

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share