சபரிமலை: தீர்ப்பை மீறுவது பிரதமராக இருந்தாலும்- நீதிபதி எச்சரிக்கை!

Published On:

| By Balaji

சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு ஐந்து முதல் ஐம்பது வயது கொண்ட பெண்களை அனுமதிக்கலாம் என்று கடந்த 2018 செப்டம்பர் 5 ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட ரிட் மனுக்கள், சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை நேற்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழங்கியது. அதன்படி இந்த அமர்வில் மூன்று நீதிபதிகள் வழக்கை ஏழு நீதிபதிகள் அமர்வு கொண்ட பெஞ்ச்சுக்கு மாற்றித் தீர்ப்பளித்தனர். ஆனால் இரு நீதிபதிகள் ஏற்கனவே அளித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு செல்லும் என்று சொல்லி சீராய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகியோர் இந்த வழக்கை ஏழு பேர் கொண்ட பெஞ்ச்சுக்கு மாற்றினார்கள். ஆனால் நீதிபதிகள் ரோஹிண்டன் நரிமன், சந்திரசூட் ஆகிய நீதிபதிகள் பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

பெரும்பான்மை அடிப்படையில் 3 நீதிபதிகள் எடுத்த முடிவான 7 பேர் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. ஆனால் நரிமன், சந்திரசூட் ஆகிய இரு நீதிபதிகளின் தீர்ப்புகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

“கடந்த 2018 செப்டம்பர் மாதம் அளிக்கப்பட்ட பெண்களை ஐய்யப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை அமல்படுத்த மறுப்பது கண்டிக்கத் தக்கது” என்று இரு நீதிபதிகளும் கூறியுள்ளனர்.

நீதிபதி நரிமன் தனது தீர்ப்பில், “உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு வெளிப்படையாக மீறப்பட்டது. 10 முதல் 50 வயதிற்குட்பட்ட நிராயுதபாணியான பெண்கள் சபரிமலையில் தங்கள் அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமை முறியடிக்கப்பட்டு நின்றதற்கு இந்த தேசமே சாட்சியாக நிற்கிறது. ஒரு விவகாரத்தில் சட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பு எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட பிறகு அது நாட்டிலுள்ள அனைவரையும் கட்டுப்படுத்தும். தீர்ப்புக்கு இணங்குவதா வேண்டாமா என்ற வாய்ப்புகளெல்லாம் யாருக்கும் கிடையாது” என்று குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் கடந்த ஆண்டு தீர்ப்புக்குப் பிறகும் சபரிமலைக்குள் பெண்கள் அனுமதிக்க மறுக்கப்பட்டு வன்முறை நிகழ்ந்ததை சுட்டிக் காட்டியிருக்கிறார் நீதிபதி.

மேலும் அவர், கருத்து வேறுபாடுகளை தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் ஊடாக பரவலான விளம்பரம் கொடுக்கவும், மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் கேரள அரசுக்கு அறிவுறுத்தினார்.

இதுமட்டுமல்ல, “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை யார் மீறுகிறார்களோ அது பிரதமராகவே இருந்தாலும், முதல்வராக இருந்தாலும், சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்கள் தாங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது இந்திய அரசியலமைப்பை நிலை நிறுத்தவும், பாதுகாக்கவும் மேற்கொண்ட உறுதிமொழிகளை மீறுகிறவர்கள் ஆவார்கள்” என்று நீதிபதி நரிமனின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சபரிமலைத் தீர்ப்பில் தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகளுக்கு மாற்றாக நரிமன் அளித்த தீர்ப்பின் வாசகங்கள் நீதித்துறை வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் விவாதமாகிக் கொண்டிருக்கிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share