கொரோனா பாதிப்பினால் அதிகளவில் உயிரிழப்பது யார்? : அமைச்சர் பதில்!

Published On:

| By Balaji

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழக்கின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று 19ஆவது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும். அதுபோன்று முகக்கவசம் அணிதல்,சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட வழிமுறைகளை கடைபிடிப்பதில் மக்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

அண்மை காலமாக தொற்று அதிகரித்து வந்தாலும், இறப்பின் சதவிகிதம் குறைவாக இருப்பது மன நிறைவாக இருக்கிறது. அதற்கு காரணம் தடுப்பூசி. இதுவரை 89 சதவிகிதம் பேர் தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்தியுள்ளனர். 65 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர் இரண்டாம் தவணையை செலுத்தியுள்ளனர். தற்போது இருக்கும் 25, 30 உயிரிழப்புகள் கூட தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள்தான் என்பது வருத்தமளிக்கிறது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ள முதியவர்கள் மட்டுமே மூன்றாம் அலையில் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனர். அதனால் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும்தான் 50 ஆயிரம் மையங்கள் மூலம் தொடர்ந்து 18 வாரங்கள் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சென்னை ஐஐடி நிர்வாகம் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கொரோனாவை கண்டறியும் வகையில் நடமாடும் பரிசோதனை வாகனத்தை உருவாக்கி அரசுக்கு அர்ப்பணித்துள்ளனர்” என்று கூறினார்.

போலி தடுப்பூசி சான்றிதழ் குறித்து பேசிய அவர்,” 9 கோடியே 17 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் ஒன்றிரண்டு பேர் செய்யும் திருட்டுத்தனத்தை கண்டுபிடிப்பது என்பது கஷ்டமான ஒன்று. ஆனாலும் கண்காணிக்க வேண்டும். திருட்டுத்தனம் பன்றவர்களுக்கு சொல்வது என்னவென்றால், உங்கள் உயிரை காப்பாற்றுவதற்காகதான் தடுப்பூசி போட சொல்கிறோம். தனியார் மருத்துவமனைகளில் 1410 ரூபாய்க்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால், அரசு பந்தல் அமைத்து இலவசமாக பூ போல் தடுப்பூசி போட்டு அனுப்புகின்றனர். இதில் போய் தடுப்பூசி போட்ட மாதிரி ஏன் போலி சான்றிதழ் உருவாக்கி கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் ”கன்னியாகுமரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 9 ஆயிரம் பக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு 7 ஆயிரமாக குறைந்துள்ளது. பொங்கல் பண்டிக்கைக்கு மாநகர பகுதியிலிருந்து மக்கள் கிராமப்பகுதிகளுக்கு சென்றதன் காரணமாக, மாநகர பகுதிகளில் தொற்று பாதிப்பு குறைந்தும், கிராமப்பகுதிகளில் அதிகரித்தும் காணப்படுகிறது. தொற்று பாதித்த 6 சதவிகிதம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீதமுள்ள 94 சதவிகிதம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். உருமாற்றம் அடைந்த கொரோனா உட்பட அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை உண்டு. இதில் எந்தவொரு மாற்றமும் கிடையாது” என்று கூறினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share