தடுப்பூசி: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்!

Published On:

| By Balaji

அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள் அமைத்து, முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக நீதி முன்னேற்றத்துக்கான மையத்தின் இணை நிறுவனர் மீனாட்சி பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில்,” மாற்றுத்திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதனால், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கவும், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் சலுகை வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கின் கடந்தமுறை விசாரணையின்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு தனி கவுண்டர் போன்று ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா என தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டு, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு விசாரணை இன்று(ஏப்ரல் 19) தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத் திறனாளிகளை முன்னுரிமை பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்துக்கு இதுவரை பதில் இல்லை. இருப்பினும், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து, அனைத்து தடுப்பூசி மையங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்க தமிழக அரசு தயாராக உள்ளது எனதெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள் அமைத்து, அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சிறப்பு கவுண்டர்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் சாய்தள பாதை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதுபோன்று, 18-45 வயது குறைவானர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதினால் விளைவுகள் ஏதும் ஏற்படுமா என்பதை மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்து மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பை நிர்ணயிப்பது குறித்து மூன்று நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர் நீதிபதிகள்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share