சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யும் முடிவுக்கு சென்னையை சேர்ந்த 237 வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யவும் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்தது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்வதை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த 237 வழக்கறிஞர்கள் உச்ச நீதிபதி தலைமை நீதிபதி என்.வி ரமணா, மற்றும் நீதிபதிகள் லலித், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், ”சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்று 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவரது மாற்றம் என்பது பொதுநலன் அடிப்படையிலா அல்லது சிறந்த நீதி பரிபாலனத்துக்கா?
75 நீதிபதிகளை கொண்ட சார்ட்டர்டு உயர் நீதிமன்றமான, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து, 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இரு நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மாற்றுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
சம்பந்தப்பட்ட நீதிபதியின் முறைகேடுகள் காரணமாக இடமாற்றம் பரிந்துரை செய்யப்பட்டதா? அல்லது இதற்கு வெளிபுற காரணிகளின் அழுத்தமா? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
மேலும், சிறந்த நீதி நிர்வாகத்திற்கான இடமாற்றங்கள் கொள்கையளவில் அவசியமானதாக இருந்தாலும், இந்த ஆண்டு மட்டும் 35,000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பெரிய உயர் நீதிமன்றத்தின் துணிச்சல் மிக்க, சிறந்த ஆளுமை மிகுந்த ஒரு தலைமை நீதிபதியை மாதத்துக்கு 70-75 வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்யப்படும் சிறிய உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யும்போது அதன் நோக்கத்தை அறிய நீதித்துறையின் அங்கமான பார் கவுன்சிலுக்கு உரிமை உண்டு. இந்த பணியிட மாற்றம், ஒரு நேர்மையான நீதிபதியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் நீதிபதி பானர்ஜியை செப்டம்பர் 16, 2021 அன்று இடமாற்றம் செய்ய பரிந்துரைத்ததாகத் தெரிகிறது. ஆனால், இந்த முடிவு நவம்பர் 9 தேதியன்று தான் பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இது கொலிஜியத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒளிவுமறைவின்மை பற்றிய கவலையான கேள்வியை எழுப்புகிறது.
அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பணியிட மாற்றத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த விஜயா கமலேஷ் தஹில்ரமணியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதை மறுபரிசீலனை செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால், அந்த கோரிக்கையை கொலிஜியம் ஏற்கவில்லை. அதனால், தன் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,