#குஷ்பு எங்கே?

Published On:

| By Balaji

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (செப்டம்பர் 17) நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர், “நாங்குநேரி காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி. எனவே அங்கு காங்கிரஸ்தான் போட்டியிட வேண்டும்” என வலியுறுத்தினார்.

கூட்டத்தில் பொருளாதார மந்தநிலை குறித்து விவாதிக்க வரும் 30ஆம் தேதி காங்கிரஸ் மாநில பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் எனவும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பது எனவும், நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து, சிதம்பரம் கைதுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக டிஜிட்டல் பேனர்களை காங்கிரஸ் கட்சியினர் எவரும் பொது இடங்களில் வைக்கக் கூடாது எனவும், டிஜிட்டல் பேனர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்படுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பது உள்பட 13 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நாங்குநேரி தொகுதி குறித்து எதுவும் பேசாத பீட்டர் அல்போன்ஸ் கூட்டம் முடிந்த பிறகு மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கின் அறைக்கு சென்றார். அங்கு அவரைச் சந்தித்து, ‘நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வெற்றிபெற்ற தொகுதி. அங்கே வரவுள்ள இடைத் தேர்தலில் நாம்தான் போட்டியிட வேண்டும். இதுதொடர்பாக திமுகவிடம் பேசி காங்கிரஸுக்கு நாங்குநேரி தொகுதியை பெற்றுத் தர வேண்டும்” என்று அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார். நாங்குநேரி தொகுதியில் போட்டியிட ஏற்கனவே பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக நாம் ஏற்கனவே [செய்தி](https://minnambalam.com/k/2019/05/29/56) வெளியிட்டுள்ளோம். அதன் காரணமாகவே முகுல் வாஸ்னிக்கிடமும் நாங்குநேரி தொகுதி குறித்து அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.

இதையெல்லாம் விட கூட்டத்தில் இருந்தவர்களால் முக்கியமாக பேசப்பட்ட விஷயம் காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளரான குஷ்பு எங்கே என்பதுதான். திமுகவிலிருந்து விலகி 2014 ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைவராக இருந்தபோது கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டிய குஷ்பு, திருநாவுக்கரசர் பதவியேற்ற பிறகு தனது பணிகளைக் குறைத்துக்கொண்டார். தற்போது கே.எஸ்.அழகிரி தலைவராகி 6 மாதங்கள் கடந்துவிட்ட சூழலிலும் சமீப காலமாக காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காமல் தவிர்த்து வருகிறார் குஷ்பு.

நேற்று சிறப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு தேசிய செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் குஷ்புவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக அழைப்பு சென்றிருக்கிறது. அதேபோல முகுல் வாஸ்னிக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். இருந்தும் கூட்டத்திற்கு வருவதை தவிர்த்துவிட்டார் குஷ்பு.

சமீபத்தில் லண்டன் சென்றிருந்த குஷ்பு, அங்கு ஷாப்பிங் செய்வதற்காக ஆக்ஸ்போர்ட் தெருவுக்கு போனார். அங்குள்ள கடையில் பிரபலங்கள் வரிசையில் ரஜினியின் ஸ்டிக்கரும் இடம்பெற்றிருப்பதைக் கண்டு அதனைப் புகைப்படம் எடுத்து, “லண்டனில் ஆக்ஸ்போர்டு தெருவில் உள்ள ஒரு நினைவு பரிசு கடையில் நான் கண்டதைப் பாருங்கள் … நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு பாஜக தேர்தல் அறிக்கைக்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்த சூழலில், “ஒரு இந்திய குடிமகனாக ஒரு கருத்தை சொல்ல ரஜினிக்கு உரிமை இல்லையா?” என்று கூறி குஷ்பு அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அடுத்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கிவிடுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டங்களில் பங்கேற்காமல் தவிர்த்துவரும் குஷ்புவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதுதான் காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சாக இருந்துவருகிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share