டயட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை உணவைப் பெரும்பாலும் தவிர்ப்பார்கள். ஆனால் மதிய உணவுக்கு முன் சுறுசுறுப்பின்றி சுழல்வார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த கோதுமை பிரெட் முட்டை உப்புமா செய்து ரிலாக்ஸ் டைமில் சாப்பிடலாம். நீண்ட நேரம் பசி எடுக்காது. உடனடி புத்துணர்ச்சி தரும்.
எப்படிச் செய்வது?
பெரிய வெங்காயம் ஒன்று, பச்சை மிளகாய் இரண்டு, மல்லித்தழை சிறிதளவைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். நான்கு ஸ்லைஸ் கோதுமை பிரெட்டை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வாணலியில் தேவையான அளவு எண்ணெய்விட்டு சூடானதும் சிறிதளவு கடுகு, உளுந்தம் பருப்பு, கால் டீஸ்பூன் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். நன்கு வதங்கியதும் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றவும். அதன் மீது கால் டீஸ்பூன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறவும். முட்டை உதிரியாக வந்ததும் பிரெட் துண்டுகளைப் போட்டு கிளறவும். உப்புமா பதத்துக்கு வந்ததும் மல்லித்தழையைத் தூவி இறக்கவும்.
சிறப்பு
முட்டை, கோதுமையில் அதிகளவு சத்துகள் நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க விரும்புபவர்களுக்கும் இந்த பிரெட் உப்புமா ஏற்றது.