கேலி, கிண்டல்களால் மனமுடைந்து, மரணமடைய வேண்டும் என்று கேட்டு அழுத குவாடன் என்ற சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டப்பட்டிருக்கும் நிலையில், ‘குவாடன் ஒரு நடிகர், அவரது உண்மையான வயது 18 என்றும் தவறான வழியில் பிரபலமடைந்து அதன் வழி பணம் ஈட்டவே அவரின் தாய் இவ்வாறு செய்துள்ளார்’ என்றும் சிலர் புகைப்பட ஆதாரங்களுடன் குற்றம்சாட்டி வருகின்றனர். இது இணைய பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
வளர்ச்சிக் குறைப்பாட்டு நோயால் பாதிக்கப்பட்டு, அதனால் அனுபவித்த கேலி கிண்டல்களைத் தாங்க முடியாமல் கதறி அழுத குவாடனின் வீடியோவை அத்தனை எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. ‘எனக்கு ஒரு கயிறு கொடுங்கள். எனக்கு ஒரு கத்தியைத் தாருங்கள். நான் தற்கொலை செய்ய வேண்டும்’ என்று கேட்டு அவர் அழுதபடியே கூறும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பலரது மனத்திலும் ஒருவித குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. நகைச்சுவை என்று நினைத்து நாம் பேசிய வார்த்தைகள் எந்த அளவு பிறரைக் காயப்படுத்தி இருக்கும் என்று யோசிக்க வைத்தது. அத்தகைய ஒரு தெளிவு நம்மில் ஏற்படக் காரணமாக அமைந்த குவாடன் ஒரு ஏமாற்றுக்காரனா, பொய்யான வயதைக் கூறி நாம் ஏமாந்துவிட்டோமா என்ற கேள்வி பலரது மனத்திலும் எழும் விதமாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
சில இளைஞர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் இருக்கும் குவாடனின் புகைப்படம் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. குவாடனின் பின்புறம் சுவரில் 18 என்று எழுதப்பட்டுள்ளதால்தான் இத்தனை குழப்பம். ஆதாரபூர்வமான நிரூபணம் என்பதாகச் சிலர் பகிர்ந்த இந்த புகைப்படங்கள் அனைவரையும் ஒரு கணம் சிந்திக்க வைத்தது. அதன் உச்சகட்டமான ஃபேக்ட் செக் எனப்படும் உண்மை கண்டறியும் ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டது.
If you STILL are doubting Quaden Bayles’ age… facts HERE: https://t.co/SOLrzqZTDN
— Perez (@ThePerezHilton) February 22, 2020
அந்த முடிவுகளின்படி, ‘குவாடனின் நிஜ வயது ஒன்பது’ தான் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அனைவருக்கும் குழப்பத்தைத் தந்த பிறந்தநாள் விழா புகைப்படம் குவாடனுக்கு நெருக்கமான ஒருவரின் 18ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குவாடனின் தாயார் 2011ஆம் ஆண்டு ஒரு வயது குழந்தை குவாடனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அவையும் 2010ஆம் ஆண்டு பிறந்த குவாடனுக்கு ஒன்பது வயதுதான் ஆகிறது என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளது.
இவை அனைத்திற்கும் மேலாக, குவாடன் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தனது நான்கு வயதிலேயே ஆரம்பித்துவிட்டார் என்பதும் தெரியவந்துள்ளது. வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகச் செயல்பட்ட குவாடன் தனது நான்கு வயதிலேயே பிரபல டிவி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
2015ஆம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றப்பட்ட அந்த வீடியோ குவாடனின் வயது குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தனது கண்ணீரால் நமது கண்களைத் திறந்த குவாடன், தன் மீதான குற்றச்சாட்டால் நம்மை குற்றமற்றவர்களாக்கவும் வழிகாட்டியுள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”