மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு: பள்ளி மாணவி வழக்கு!

Published On:

| By Balaji

மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டுமென பள்ளி மாணவி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பல்லுயிர் சூழல் மண்டலத்தின் மிகவும் முக்கிய பகுதியாகவும், குஜராத், மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா, கோவா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களை இணைக்கும் வகையிலும் மேற்கு தொடர்ச்சி மலை இருந்து வருகிறது. ஆனால், மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் இருப்பதால், மலை அதன் தன்மையை இழந்துவருவதாக சூழலியலாளர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க கோரி, 27 பேர் கொண்ட குழுவினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவர்களில் குன்னூரைச் சேர்ந்த பள்ளி மாணவி காவியாவும் ஒருவர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவியா, “மாதவ் காட்கில் என்பவர் தலைமையில் சூழலியல் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு, மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வழிமுறைகள் வெளியிடப்பட்டன. மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. ஆனால், இதனை எந்த மாநில அரசும் நடைமுறைப்படுத்தவில்லை. நிபுணர் குழுவின் வழிமுறைகளை பின்பற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு ஆணை பிறப்பித்து, மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டுமென வழக்கு தொடர்ந்துள்ளோம்” என்றார்.

பள்ளி மாணவி ஒருவர் இவ்வாறு வழக்கு தொடர்ந்துள்ளது, பல்வேறு தரப்பினரிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

**எழில்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share