xஉயர்கல்வி படிப்பு: நுழைவுத் தேர்வு கட்டாயம்!

Published On:

| By Balaji

மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு உள்ளது போல கலை, அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்புரத்தே தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வரை, எம்.பி.பி.எஸ், மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு மட்டுமே நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. நடப்பாண்டு முதல் சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இயற்கை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும், பிஎஸ்சி நர்சிங் மற்றும் உயிர் வேதியியல், உயிர் விலங்கியல், நுண்ணறிவியல் போன்ற கலை அறிவியல் கல்லூரியில் உள்ள உயிர் அறிவியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்திந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்புரத்தே, அனைத்து வகையான உயர்கல்வி படிப்புகளுக்கும் திறனறிதல் தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் உயர்கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவித்தார்.

கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த அறிவிப்புக்கு பெற்றோர்கள், கல்வியாளர்கள் என பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கின்றனர்.

“சத்தமே இல்லாமல் அமலுக்கு வந்துள்ளது புதிய கல்விக் கொள்கை எனக் கூறும் கல்லூரி பேராசிரியர் கார்த்தி, “இனி ஒவ்வொரு மாணவனும் பத்தாம் வகுப்பில் இருந்தே அவருக்கான உயர் கல்வியில் நுழைய பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் Byjus, Vendantu, UnAcademy, Akash என புற்றீசல் போல வளரும் நுழைவு தேர்வு பயிற்சி மையங்கள், மறுபுறம் அனைத்து விதமான உயர்கல்வி படிப்புகளுக்கும் செல்ல நுழைவு தேர்வு அறிவிப்புகள்” என்கிறார் பேராசிரியர்.

”மருத்துவம் தொடங்கி பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகள் வரை உயர்கல்வியில் சேர நுழைவுத் தேர்வுகள் வைப்பது ஒரு சமூக ஊழலாகும். இது ஏற்கனவே இருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கவே வழி வகுக்கும். மருத்துவத்திற்கான நீட் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் பல ஆண்டுகள் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி பயிற்சி மையம் செல்லும் சூழல் உள்ளது. இதனால் பயிற்சி மையங்கள் மூலைக்கு மூலை அதிகரித்து ஏற்கனவே இருக்கும் பள்ளிக் கல்லூரி கட்டமைப்புகள் சிதைந்து போக வாய்ப்புண்டு. பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி என்றால் இந்த அரசு யாருக்கானது” என்ற கேள்வியை வைத்துள்ளார் பேராசிரியர்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share