-ஸ்பிளாக்கர்
பிக் பாஸ் சீசன் 3 தொடங்கியதிலிருந்து நடைபெற்றுவரும் பஞ்சாயத்துகளைத் தொடர்ந்து, தற்போது ஸ்மோக்கிங் ரூம் பஞ்சாயத்து ஒன்று கிளம்பியிருக்கிறது. அதைப்பற்றித் தெரிந்துகொள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்க்கவேண்டும்.
**பிக் பாஸ் வீட்டில் 24ஆவது நாள்**
லக்ஷரி பட்ஜெட்டுக்கான ‘டிக் டிக்’ டாஸ்க்கை முடித்துவிட்டு, சொந்த பஞ்சாயத்துகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த பிக் பஸ் ஹவுஸ்மேட்ஸ்களை உட்காரவைத்துப் பேசினார் பிக் பாஸ். அப்போது டிக் டிக் டாஸ்க்கின் மூலம் 1200 பாயிண்ட்களை வென்றிருந்த பிக் பாஸ் குழுவினருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்மோக்கிங் ரூமில் ஒருவருக்கு மேலாக, மூன்று பேர் ஒரே நேரத்தில் இருந்தது பிராதுக்கு உள்ளாக்கப்பட்டது. ஒருவருக்கு மேல் ஸ்மோக்கிங் ரூமை பயன்படுத்தக்கூடாது என்ற வாய்மொழி உத்தரவினை கடைபிடிக்காதது குறித்து பேசிய பிக் பாஸ் “வீட்டின் தலைவியே இந்த குற்றத்தில் ஈடுபட்டிருப்பதால் லக்ஷரி பட்ஜெட்டிலிருந்து 100 பாய்ண்ட்கள் குறைக்கப்படுகிறது” என்று பிக் பாஸ் கூறினார். சாக்ஷி, ஷெரின், அபிராமி ஆகிய மூன்று பேரும் ஒரே நேரத்தில் ஸ்மோக்கிங் ரூமுக்குள் இருந்ததனால் ஏற்பட்ட பாய்ண்ட் குறைப்புக்கு, முழு பொறுப்பையும் சாக்ஷி ஏற்றுக்கொண்டதால் தான் அவர் மீராவுடன் ஜெயிலுக்குள் செல்லவேண்டிய பரிதாப நிலைக்கு ஆளானார். சாக்ஷிக்கு இவ்வளவு பெரிய தண்டனை கிடைத்தது மட்டுமல்லாமல், இந்த ஸ்மோக்கிங் ரூம் பஞ்சாயத்து புதிய பஞ்சாயத்தையும் பிக் பாஸ் டீமுக்கு; முக்கியமாக கமலுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
Tobacco Monitor என்ற அப்ளிகேஷன், பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் பற்றி மக்களே புகார் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஒன்று. பொது வெளியில் நடைபெறும் எல்லா தவறுகளையும், அரசு அமைப்புகளின் மூலம் மட்டுமே தடுத்து நிறுத்துவது சிரமம் என்பதால், மக்களையும் இதில் ஈடுபடுத்தும் வகையில், பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் குறித்து புகாரளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே ‘COPTPA 2003, Section 4′ சட்டத்தின்படி, “30 பேருக்கும் மேலாக பயன்படுத்தக்கூடிய பொது இடங்களில் அதிக இடம் கொண்ட ஸ்மோக்கிங் ரூம்கள் வைக்கப்பட வேண்டும் என்பதும், தெரியாமல் கூட மற்றவர்களுக்கு இந்த டொபாக்கோ பொருட்களினால் பாதிப்பு ஏற்படக்கூடாது” என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த விதியினை, பிக் பாஸ் சீசன் 3-யில் இடம்பெற்றிருக்கும் ஸ்மோக்கிங் ரூம் பின்பற்றவில்லை என்பது, டொபாக்கோ மானிட்டர் அப்ளிகேஷனின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிரில் அலெக்சாண்டரின் குற்றச்சாட்டு.
பிக் பாஸ் முதல் சீசனில் ஸ்மோக்கிங் ரூம் ஏற்படுத்திய பஞ்சாயத்து மிக முக்கியமானது. ஓவியாவை சம்மதம் செய்கிறேன் என்று ஆரவ் செய்த வேலை என்னவென்பது மக்கள் அறிந்தது. அதுபோல இனி எதுவும் நடைபெற்றுவிடக்கூடாது எனும் நோக்கத்தால், மற்ற கண்டெஸ்டண்ட்களும் பயன்படுத்தும் இடத்திலேயே, புகையை உறிஞ்சி வெளியேற்றும் ‘Suction’ பிராசஸில் வடிவமைக்கப்பட்ட ஸ்மோக்கிங் ரூமினை உருவாக்கியிருந்தது பிக் பாஸ் 3 டீம். ஆனால், அந்த இடத்தின் அளவு சிறியதாக இருப்பதால், ஒருவருக்கு மேல் அங்கு இருக்கக்கூடாது என்ற விதியும் உருவாக்கினார்கள். ஆனால், பெரும்பாலும் அந்த விதி பின்பற்றப்படுவதில்லை. சாக்ஷி, அபிராமி, ஷெரின் ஆகியோரின் மூவர் கூட்டணி எப்போதும் ஒன்றாகவே செல்வதால் அவர்களது செயல் குற்றம் என தீர்ப்பளித்து தண்டனையை வழங்கினார் பிக் பாஸ். ஆனால், பிக் பாஸ் குற்றம் என்று ஒப்புக்கொண்டதால், நடைபெற்ற அந்த குற்றத்தை வெளியில் இருக்கும் டொபாக்கோ மானிட்டர் அமைப்பும் கையிலெடுத்திருக்கிறது.
ஆயிரம் விளக்கங்கள் சொன்னாலும் ஒருவர் வெளியிடும் புகை, அவருக்கே ஆபத்தானது எனும்போது உடன் இருக்கும் மற்றவர்களுக்கு அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது. அதையும் மீறி லட்சக்கணக்கான மக்கள் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில், புகைப்பிடிப்பதை மிகவும் இலகுவான ஒன்றாகக் காட்டுவதும் அதைப் பார்ப்பவர்கள் மத்தியில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்? என்ற கேள்விகளுக்கு, பாண்டிச்சேரியில் புகையிலை ஒழிப்பு பேரணியில் ஈடுபட்ட நடிகரும், பிக் பாஸ் நிகழ்ச்சித் தொகுப்பாளரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கமல்ஹாசன் விளக்கம் கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது டொபாக்கோ மானிட்டர் அமைப்பு. வரும் வார இறுதியில் நிகழ்ச்சியில் வரும் கமல் என்ன சொல்லப்போகிறார் என்று பார்ப்போம்.
**
மேலும் படிக்க
**
**[‘காம்ரேட்’டாக மாறிய விஜய் சேதுபதி](https://minnambalam.com/k/2019/07/19/26)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”