வருகிற 2039ஆம் ஆண்டில் பெங்களூருவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பெங்களூருவில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதிகரித்துவரும் வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சிகள் காரணமாக வெளி மாநிலங்களை சேர்ந்த பல பேர் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். நகரில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில், மக்கள் வசிக்கும் வீடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
பெங்களூரு தற்போது தகவல் தொழில்நுட்ப நகரம், பூங்கா நகரம் ஆகிய புனைப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் நல்ல வாழ்வாதார வேலை வாய்ப்புகளை தேடி பெங்களூரில் குவியும் மக்கள் தொகை எல்லா வருடமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் நகரில் பெருகும் வீடுகளுக்கு பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், காவிரி தண்ணீரை விநியோகம் செய்கிறது.
பெங்களூரு நகரில் வசிக்கும் மக்களுக்கு தினமும் 2100 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இந்நிலையில் சில வீடுகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என்பதால், சட்டவிரோதமாக தங்களது வீடுகளில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். அதனால் பெங்களூருவில் வரும் 2039ஆம் ஆண்டில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு வரும் என்று மாநில குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்த பெங்களூரு தண்ணீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “தினமும் 500க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளிகள் பெங்களூரு நகரில் வீடுகளை அமைத்து வருகின்றனர். தற்போது பெங்களூருவில் புதிதாக உருவாக்கப்பட இருக்கும் 110 கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகிக்க வேண்டிய நிலைமை உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் வரும் 2030ஆம் ஆண்டு கடும் குடிநீர் பிரச்சனை தலை தூக்கி, 2030ஆம் ஆண்டில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
.