பள்ளிக்குழந்தைகளுக்கு ‘வாட்டர் பெல்’: புதுவையில் அமல்!

Published On:

| By Balaji

பள்ளிக் குழந்தைகள் தண்ணீர் அருந்தாமல் இருப்பதால் பாதிக்கப்படுவதை தடுக்க புதுச்சேரியில் ‘வாட்டர் பெல்’ முறை அமலுக்கு வரவுள்ளது.

கேரளாவில் பள்ளிக் குழந்தைகள் சரியான இடைவெளியில் தண்ணீர் குடிக்கும் பொருட்டு பாடவேளைகளிலேயே நேரம் ஒதுக்கி ‘வாட்டர் பெல்’ முறை கொண்டுவரப்பட்டது. இதற்கு பெற்றோர்கள், மருத்துவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கேரளாவை தொடர்ந்து, கர்நாடகாவிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த, கருங்குளம் என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள் பாடவேளைகளில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. நவம்பர் 14ஆம் தேதி, அமைச்சர் செங்கோட்டையன், கேரளாவைப் போல தமிழகத்திலும் பள்ளிகளில் பாட வேளைகளில் தண்ணீர் குடிப்பதற்கு 10 நிமிடம் ஒதுக்க அரசாணை பிறப்பிக்கப்படும் என்றார்.

இந்நிலையில், புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை, அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் பேசுகையில், குழந்தைகள் நல ஆணைய பரிந்துரைப்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒரே மாதிரியான பள்ளி வேலை நேரம் பின்பற்றப்பட வேண்டும். அனைத்து சிறப்பு வகுப்புகளும் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணிக்குள் இருக்க வேண்டும்.

பள்ளிகளிலிருந்து குழந்தைகள் சூரிய அஸ்தமனத்துக்குள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வகையில் செயல்பட வேண்டும். அத்துடன் இதில் உள்ள சாதக, பாதக அம்சங்களை ஆராய துணைக்குழுவை கல்வித்துறை இயக்குனர் அமைக்க வேண்டும்.

குழந்தைகள் பள்ளிகளில் போதிய அளவில் தண்ணீர் அருந்தாத சூழல் உள்ளது. இதனால் குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாவதாக மருத்துவர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர். வீட்டிலிருந்து எடுத்து செல்லும் பாட்டிலில் தண்ணீர் அருந்தாமல் அப்படியே குழந்தைகள் வீட்டுக்கு எடுத்து வருவதாகவும், பள்ளியில் தண்ணீர் அருந்த அவகாசம் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர். எனவே நாளொன்றுக்கு நான்கு முறை குழந்தைகள் தண்ணீர் பருக வசதியாக ‘தண்ணீர் அருந்த மணி’ அடிக்க வேண்டும். இதை வரும் திங்கள்கிழமை முதல் செயல்படுத்த வேண்டும்,” என்று உத்தரவிட்டார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share