அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டிசி பகுதியில் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக பொதுமக்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. கடந்த மாதம் 24ஆம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே பகுதியில் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். மேலும் அமெரிக்கா பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இனி துப்பாக்கி கலாச்சாரத்தை அமெரிக்காவில் ஒழிக்க பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையிலிருந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவது மிகவும் வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. இதை கட்டுப்படுத்த துப்பாக்கி சட்டங்களில் கடுமையான சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். மேலும் துப்பாக்கிகள் வாங்கும் வயது வரம்பை 18 வயதிலிருந்து 21 வயதாக உயர்த்த வேண்டும். துப்பாக்கி உற்பத்தியாளர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி கலாச்சாரத்தை எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் அமெரிக்கா வாஷிங்டன் டிசி பகுதியில் இது துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து துப்பாக்கிக்கு எதிராக பல கோஷங்களை எழுப்பினர். மேலும் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பொதுமக்கள் பயன்படுத்துவதை அமெரிக்காவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
.