oசிறப்புக் கட்டுரை: அணைசுவரின் பொறியியல்!

Published On:

| By Balaji

மு இராமனாதன்

பருவ மழையினால் நேரும் பாதிப்புகளை நமது ஊடகங்கள் இரண்டு விதமான சொல்லாடல்களின் கீழ் கொண்டு வந்துவிடும். பருவமழை பொய்த்தது என்பது முதல் வகை. ஊரே வெள்ளக்காடானது என்பது இரண்டாவது வகை. இரண்டாவது வகைப் பாதிப்புதான் நாட்டின் பல மாநிலங்களில் இப்போது நேர்ந்திருக்கிறது. இப்படியான மழைக்காலப் பாதிப்புகளில் இடிந்து விழும் சுற்றுச் சுவர்களைப் பற்றிய செய்திகளும் இருக்கும்.

தாதா நாகர்வேலி ஒன்றியப் பிரதேசத்தின் தலைநகர் சில்வசா. இம்மாதத் துவக்கத்தில் ஒரு மழை இரவில், நகரின் தொழிற்சாலை ஒன்றின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. விழுந்த இடத்தில் கட்டடத் தொழிலாளர்களின் குடிசை இருந்தது. ஐந்து உயிர்கள் பலியாயின. இந்த மாதம் பெருமழை பெய்த இடங்களில் மும்பையும் இருந்தது. நகரின் புகழ் மிக்க மலபார் பகுதியில் ஒரு பெரிய சுற்றுச் சுவர் விழுந்தது. அது தாங்கி நின்ற உயர்வான நிலமும் சரிந்தது. பிரதான சாலைகளின் போக்குவரத்து முடங்கியது.

இம்மாதிரியான சுற்றுச் சுவர் விபத்துகளுக்குத் தமிழகமும் விலக்கல்ல. டிசம்பர் 2019ல் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் நடந்த விபத்தை எப்படி மறக்க முடியும்? மழை கொட்டித் தீர்த்த அந்த இரவில், மேலே இருந்த ஒரு பெரிய வீட்டின் சுற்றுச் சுவர் கீழே இருந்த பல சிறிய வீடுகளின் மீது விழுந்தது. உறக்கத்திலேயே 17 பேர் பலியாயினர். சில சமூக ஆர்வலர்கள் இதைத் தீண்டாமைச் சுவர் என்று சாடவும் செய்தனர். இப்படியான சுற்றுச் சுவர்கள் வீழ்ந்துபடுவதற்கு மழையைக் கைகாட்டி விட்டுப் போவது சுலபமானது. ஆனால் இந்தச் சுவர்களில் பலவும் அடிப்படைப் பொறியியல் கூறுகளைப் பின்பற்றிக் கட்டப்படுவதில்லை. அதை அறிந்து கொள்வதும் அவசியமானது.

இம்மாதிரியான மேலும் இரண்டு விபத்துகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஓராண்டிற்கு முன்பும், அதாவது ஜூலை 2019ல் மராட்டிய மாநிலத்தை மழை மூழ்கடித்தது. அப்போதும் இது போன்ற இரண்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. முதலாவது சுவர் மும்பையின் மலாட் பகுதியில் ஒரு நீர்த்தேக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதியையும் கீழேயுள்ள வனப்பகுதியையும் பிரிக்கும் சுவர். வனப்பகுதியில் முறையான அனுமதியின்றி, ஆனால் நெடுங்காலமாக வாழ்ந்துவந்த எளிய மனிதர்களில் 31 பேர் உயிரிழந்தனர். இரண்டாவது சுவர் புனே கொண்ட்வா பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பையும் அடுத்துள்ள தாழ் நிலத்தையும் பிரிக்கும் சுவர். கீழே கூடாரமிட்டு வசித்து வந்த கட்டடத் தொழிலாளிகள் 20 பேர் மாண்டு போயினர். இவர்கள் மராட்டியத்திற்குப் பஞ்சம் பிழைக்கவந்த பீகாரிகள்.

**அணைசுவராவது யாது?**

இப்படியான சுவர்கள் நாடெங்கிலும் அவ்வப்போது வீழ்ந்து கொண்டும், மனித உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டும் இருக்கின்றன. இவை சுற்றுச் சுவர் என்று குறிப்பிடப்பட்டாலும் இவை சுற்றுச் சுவர் மட்டுமல்ல. சாதாரணமாக சுற்றுச் சுவர்கள் ஐந்தடி, ஆறடி உயரந்தான் இருக்கும். ஆனால் மேற்குறிப்பிட்ட சுவர்களில் பலவும் 15 அடி, 20 அடி உயரமானவை. ஏனெனில் இந்தச் சுவர்கள் ஒரு புறம் உயரமாகவும் மறுபுறம் தாழ்வாகவும் இருக்கும் இரண்டு நிலப் பகுதிகளுக்கிடையே கட்டப்பட்டவை. இந்தச் சுவர்கள் உயர்ந்து நிற்கும் நிலப் பகுதியைப் பக்கவாட்டில் தாங்கிப்பிடிக்கின்றன. சுவர்களின் மேற்பகுதியானது உயர் தளத்தின் தரையிலிருந்து ஐந்தாறடி உயரமே இருக்கும். ஆனால் தாழ் தளத்திலிருந்து கணக்கிட்டால் சுவரின் உயரம் கூடுதலாக இருக்கும். ஆகவேதான் மேட்டுப்பாளையம், மும்பை, புனேச் சுவர்கள் 15-20 அடி உயரம் கொண்டிருந்தன. எனவே இவை வெறும் சுற்றுச் சுவரல்ல, பக்கவாட்டிலுள்ள மண்ணையும் தாங்கி நிற்பதால் அணைசுவர் (retaining wall) எனப்படும்.

இந்த அணைசுவர் இரண்டு விதமான பாரங்களை எதிர்கொள்ள வேண்டும். முதலாவது வகை அணைத்து நிற்கிற மண் தரும் அழுத்தமும் நிலத்தடி நீர் தரும் அழுத்தமும். இவை பக்கவாட்டிலிருந்து (laterl load) இயங்கும். இரண்டாவது வகைப் பாரம், சுவரின் எடை. இது செங்குத்தாக (vertical load) இயங்கும். இந்த அணைசுவர்கள் பக்கவாட்டுப் பாரத்தையும் செங்குத்தான பாரத்தையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட வேண்டும். இதன் நிலைத்தன்மையை உறுதி செய்துகொள்ள சுவரின் அடித்தளம் தாங்குதிறன் (bearing) கொண்டதாகவும், சுவரின் மீதான அழுத்தம் அதை நிலைகுலையச் செய்யாமலும் (overturning), சரிந்து போகாமலும் (sliding) இருக்குமாறு வடிவமைக்கப்பட வேண்டும்.

**அணைக்கட்டு**

இதே பொறியியற் கோட்பாட்டின்படிதான் அணைக்கட்டுகளும் கட்டப்படுகின்றன. நீர்பிடிப்புப் பகுதியிலுள்ள நீரின் எடை பக்கவாட்டிலிருந்தும், அணைக்கட்டின் எடை செங்குத்தாகவும் இயங்கும். பக்கவாட்டு எடைதான் பிரதானமாக இருக்கும். அது கீழ் நோக்கிச் செல்லுந்தோறும் கூடும். அதனால்தான் அணைக்கட்டுச் சுவர்களின் அகலம் மேற்பகுதியில் குறைவாகவும் கீழ்ப்பகுதியில் அதிகமாகவும் இருக்கும். இந்த விதிகள் அணைசுவருக்கும் பொருந்தும்.

**பராமரிப்பு**

மேட்டுப்பாளையம் அணைசுவர் கருங்கல்லால் ஆனது. மும்பை, புனே அணைசுவர்கள் கான்கிரீட்டால் ஆனவை. கட்டுமானப் பொருள் எதுவாகவும் இருக்கலாம். அதனதன் அடர்த்திக்கேற்ப வடிவமைக்கப்பட வேண்டும். மேலும் தரமான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். முறையான கட்டுமான நடைமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும். அணைசுவர்களின் பாதுகாப்பு நல்ல வடிவமைப்போடும் தரமான கட்டுமானத்தோடும் முடிந்து விடுவதில்லை. அவை முறையாகப் பராமரிக்கப்படவும் வேண்டும்.

மழைநீர் அணைசுவரின் ஒரு புறம் தேங்கிவிடலாகாது. சுவரின் மேற் புறமும், கீழ்ப்புறமும் மழைநீர் எளிதில் போகத்தக்க வடிகால் வாய்க்கால்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும் சுவரில் கசிவு நீர்க் குழாய்கள் நிறுவ வேண்டும். இவை மழைக்காலத்தில் சுவரின் பின்புறமுள்ள மண்ணில் இறங்கும் நீர் அங்கேயே தேங்கிவிடாமல் வெளியேற வகை செய்யும். இந்த வடிகால் வாய்க்கால்களும் கசிவுநீர்க் குழாய்களும் செவ்வனே பராமரிக்கப்பட வேண்டும். மும்பை மலாட் பகுதியின் அணைசுவர் விழுந்தவுடன், நகராட்சி ஒரு வல்லுநர் குழுவை நியமித்தது. குழுவினர் அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்த முக்கியமான குறைபாடு, சுவரில் வடிகால் வாய்க்கால்களோ கசிவுநீர்க் குழாய்களோ இல்லாதிருந்தன என்பதாகும். இதனால் நீர் ஒரு புறம் தேங்கியது. இது சுவரின் மீது கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்தது. அணைசுவரால் இந்தக் கூடுதல் அழுத்தத்தை எதிர்கொள்ள முடியவில்லை. அதற்காக அது வடிவமைக்கப்படவும் இல்லை. விளைவு- சுவர் விழுந்தது.

மேலும் அணைசுவர் தாங்கி நிற்கிற நிலப்பகுதியில் வளரும் தாவரங்களோ அவற்றின் வேர்களோ சுவருக்கு ஊறு விளைவிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அணைசுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டால் அவை பரிசோதிக்கப்பட்டுச் செப்பனிடப்பட வேண்டும். இந்த அணைசுவர்கள் நாடெங்கிலும் மீண்டும் மீண்டும் விழுவதற்கு இவற்றின் வடிவமைப்பிலோ கட்டுமானத்திலோ பராமரிப்பிலோ நேரும் குறைபாடுகள்தாம் காரணம்.

**ஹாங்காங் எடுத்துக்காட்டு**

ஹாங்காங் போன்ற வளர்ந்த நாடுகள் இந்த அணைசுவர்களை எப்படிக் கையாளுகின்றன என்று பார்ப்பது பயன் தரும். முதலில் இதன் வடிவமைப்பைப் பதிவு பெற்ற அமைப்பியல் பொறியாளரும் (registered structural engineer) மண்-தொழில்நுட்பப் பொறியாளரும் (registered geotechnical engieer) மேற்கொள்வார்கள். இந்த வடிவமைப்பை அரசின் கட்டிடத் துறையும் மண்-தொழில்நுட்பத் துறையும் சரிபார்த்து ஒப்புதல் வழங்கும். இது தரமான பொருட்களோடு முறையாகக் கட்டப்படுகிறது என்பதைப் பரிசோதிக்கவும் சான்றளிக்கவுமான பொறுப்பு இந்த அணைசுவரை வடிவமைத்த பொறியாளர்களுக்கு உண்டு. இந்தப் பொறியாளர்கள் கடுமையான தேர்வின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். இவர்களுக்கு அதிகாரம் உண்டு. பொறுப்பு உண்டு. தவறிழைத்தால் தண்டனையும் உண்டு.

மிக முக்கியமாக ஹாங்காங்கில் உள்ள அனைத்து அணைசுவர்களும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஓர் அணைசுவர் கட்டி முடிக்கப்பட்டதும் அதன் நீளம், உயரம், கனம், பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள், வடிகால் வாய்க்கால்கள், கசிவுநீர்க் குழாய்கள், பக்கவாட்டிலும் அடித்தளத்திலும் உள்ள மண்ணின் தன்மை முதலான விவரங்களைப் பட்டியலிட்டு அரசின் மண்-தொழில்நுட்பத் துறைக்குச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் துறை, அணைசுவருக்கு பிரத்யேக எண் ஒன்றை வழங்கும். இந்த ‘அணைசுவர் எண்’ சுவரின் மீது எழுதி வைக்கப்படும். சுவரின் பொறியியல் தன்மைக்கேற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தச் சுவர்களின் பராமரிப்பைப் பரிசோதித்து அரசுக்கு அறிக்கை அனுப்புகிற கடமையும் பொறியாளர்களுக்கு உண்டு. வடிவமைப்பிற்கும் கட்டுமானத்திற்கும் வழங்கப்படும் முக்கியத்துவம் அதன் பராமரிப்பிற்கும் நீட்டிக்கப்படும். மக்களுக்கு சுற்றுச் சுவருக்கும் அணைசுவருக்கும் இடையிலான வேறுபாடு தெரியும்.

உலகின் வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் நான்கடி உயரத்திற்கு அதிகமான சுவர்களைக் கட்ட உள்ளூர் நகராட்சியின் அனுமதி வேண்டும். சுவர்களைத் தனி நபர்கள் கட்டலாம். அது அவர்களின் சொத்தாகவும் இருக்கலாம். எனில், அவற்றின் வடிவமைப்பிலோ, கட்டுமானத்திலோ பராமரிப்பிலோ நேரும் பிழை, பொதுமக்களைப் பாதிக்கும். ஆகவே விதிகள் பின்பற்றப்படும்.

**நாம் என்ன செய்யலாம்?**

இன்றைக்கு இந்தியாவில் அணைசுவர் உள்ளிட்ட எந்தக் கட்டுமானத்திற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பொறியியல் கணக்கீடுகளையோ (engineering calculations) பொறியியல் வரைபடங்களையோ சமர்ப்பிப்பது கட்டாயமில்லை. அவை சரி பார்க்கப்படுவதோ, அவற்றுக்கு ஒப்புதல் வழங்குவதோ நடைமுறையில் இல்லை. இந்நிலை மாற வேண்டும். கட்டிடங்களுக்கும் அணைசுவர்களுக்கும் பொறியியல் வரைபடங்கள் சமர்ப்பிக்கப்படுவதும் ஒப்புதல் பெறுவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும். அடுத்ததாக, தேசியப் பொறியாளர் அமைப்புகளைத் தகுதிகாண் தேர்வுகள் நடத்தி பொறியாளர்களுக்குப் பட்டயம் வழங்கிப் பதிவு செய்யயுமாறு கேட்டுக் கொள்ளலாம். இப்படியான பொறியாளர்களே வடிவமைப்புகளையும் கணக்கீடுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.

நாளடைவில், உள்ளாட்சிகளும் தகுதிகாண் தேர்வில் வென்ற பொறியாளர்களை நியமித்துக் கொள்ளலாம். மூன்றாவதாகத் தமிழகத்தில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வடிகால் வாரியங்கள் முதலான அமைப்புகளில் அனுபவம் மிக்க பொறியாளர்கள் உள்ளனர். அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு ஒரு குழுவோ வாரியமோ அமைக்கலாம். இவர்களைக் கொண்டு முதற்கட்டமாக மாநிலமெங்குமுள்ள அணைசுவர்களைப் பரிசோதித்துப் பட்டியலிடலாம். நான்காவதாக அணைசுவர், கட்டிடங்கள் முதலானவற்றின் ஆதாரப் பொறியியல் கூறுகளைப் பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாடமாக்கலாம். இது அணைசுவர்களைச் சுற்றுச் சுவர்களிலிருந்து வேறுபடுத்தி அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வழி வகுக்கும். ஊடகங்களும் அணைசுவர்களைச் சுற்றுச் சுவர் என்று எளிய சொல்லாடல்களில் பொதுமைப்படுத்துவது குறையும். அப்போது அணைசுவர்களின் வடிவமைப்பும், கட்டுமானமும் பராமரிப்பும் சமரசமின்றி மேற்கொள்ளப்படும். அந்தக் கால கட்டத்தில் அணைசுவர்கள் யார் தலையிலும் விழாது. மனித உயிர்களின் மாண்பும் பேணப்படும்.

**கட்டுரையாளர் குறிப்பு**

மு. இராமனாதன் ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர். தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share