போரூரில் சாலையில் இளைஞர்களைத் தாக்கியது தொடர்பாக, பாதிக்கப்பட்ட இளைஞர்களின் வீட்டிற்கே நேரில் சென்று போலீசார் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
சென்னை போரூர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்களை வழிமறித்து போரூர் காவல் நிலைய தலைமைக் காவலர் பாபு என்பவர் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். அவர்களிடமிருந்த செல்போனையும் அவர் பறித்துக்கொண்டார்.
இது குறித்து போரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இளைஞர்களை தாக்கிய சம்பவத்தை ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகப் பரவியது.
இதையடுத்து, அந்த போலீசாருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
விசாரணையில் காவலர் மீது தவறு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர்களின் வீட்டுக்குச் சென்று மன்னிப்புக் கேட்க காவலர் பாபுவுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ராமாபுரத்தில் உள்ள அந்த இளைஞர்களின் வீடுகளுக்கு அம்பத்தூர் காவல் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் மற்றும் உதவி ஆணையர் கண்ணன் உள்ளிட்ட காவல் துறையினர் காவலர் பாபுவுடன் சென்று, இளைஞர்களின் குடும்பத்தினரை சந்தித்து நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தனர்.
அப்போது, ‘‘நாங்கள்தான் தவறு செய்துவிட்டோம். இனி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டமாட்டோம்’’ என இளைஞர்கள் போலீசாரிடம் கூறினர். இதையடுத்து, அவர்களுக்கு அப்துல் கலாமின் “அக்னி சிறகுகள்” புத்தகமும், இனிப்புகளும் அளித்து போலீஸ் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
சமீபகாலமாக, போலீசார்கள் வாகன சோதனை என்ற பெயரில் மக்களைத் தாக்குவது அதிகரித்துவருகிறது. இதனால், சிலருக்கு பாதிப்பும் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.�,