ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரனுக்கு, அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 26) இரவு தினகரனை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார் புதுச்சேரி எம்.பி கோகுலகிருஷ்ணன்.
டிசம்பர் 21ஆம் தேதி நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், குக்கர் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இரண்டாமிடத்தையே பிடித்தார். தேர்தல் முடிவுகள் வெளியான டிசம்பர் 24ஆம் தேதியன்று, உடனடியாக தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்தினார் வேலூர் எம்.பி செங்குட்டுவன். இதனால், மீண்டும் அதிமுகவில் கட்சி நிர்வாகிகளின் அணி மாற்றம் நிகழும் என்ற எதிர்பார்ப்பு தொடங்கியது.
டிசம்பர் 25ஆம் தேதியன்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தினகரனைச் சந்தித்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, அதிமுகவில் சசிகலாவின் ஆதிக்கமிருப்பதாகக் குரல் கொடுத்து வந்தவர் இவர். இதனால், இருவரது சந்திப்பும் அரசியல் பார்வையாளர்களால் உற்றுநோக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நேற்று (டிசம்பர் 26) தினகரன் – புதுச்சேரி எம்.பி கோகுலகிருஷ்ணன் சந்திப்பு நிகழ்ந்தது. தினகரன் அணியில் இருந்த இவர், கடந்த மாதம் ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்குத் தாவினார். இவரோடு விஜிலா சத்யானந்த், நவநீதகிருஷ்ணன் ஆகியோரும் அணி மாறினார்கள். இந்த நிலையில், திடீரென தினகரனைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த கோகுலகிருஷ்ணன், “தேர்தலில் வெற்றிபெற்ற தினகரனுக்கு வாழ்த்துகள் தெரிவித்தேன். ஆனால், இப்போதும் அதிமுகவிலேயே தொடர்கிறேன்” என்று தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் வெற்றி, தினகரனின் அரசியல் மதிப்பை வெகுவாக அதிகரித்திருப்பதைக் காட்டுகின்றன இந்தச் சந்திப்புகள்.�,