எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராகத் தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப் படுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 20ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் லலித் மற்றும் கோயல் அடங்கிய அமர்வு, “சில நேரங்களில் நேர்மையாகப் பணியாற்றும் அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்து, அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
இதனால், அப்பாவி ஊழியர்கள், குற்றவாளிகளாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். ஆனால், அந்த நோக்கங்களுக்காக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படவில்லை. எனவே, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை இந்தச் சட்டத்தின் கீழ் உடனடியாகக் கைது செய்யப்படுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராகக் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இந்திய அளவில் பாரத் பந்த் போராட்டம் நடைபெற்றது. கேரளாவில் கடந்த 9ஆம் தேதி இதே காரணத்திற்காக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் நேற்று(ஏப்ரல் 16) திமுக தலைமையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் இன்று(ஏப்ரல் 17) நடந்தது. இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இறுதியில், எஸ்.சி, எஸ்.டி, சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து தமிழகம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இந்த மனுவை உடனடியாக தாக்கல் செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு மற்றும் கேரள அரசு சார்பில் ஏற்கனவே சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.�,