நம் நாட்டில் ஊழல் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் அது ஏட்டளவில் மட்டுமே உள்ளது. லஞ்சம் கொடுப்பதும் கேட்பதும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே, சட்டத்தை மீறி லஞ்சம் வாங்குவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர், கொத்தக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி (50) என்பவர், தன் மனைவி பெயரில் அகரம்சேரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அன்பு (56) என்பவரிடம் இருந்து 2 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளார். அந்த இடத்தில் பிரச்னை இருந்துள்ளது. இதனால், தனது நிலத்துக்கு வேலி அமைப்பதற்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். போலீஸ் பாதுகாப்பு வழங்க நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இநிலையில், பாதுகாப்பு வழங்க டி.எஸ்.பி. பிலிப் கென்னடி, 50,000 ரூபாயும் லஞ்சம் கொடுக்கவேண்டுமெனவும், அதில் தனக்கு 40,000 ரூபாயும் பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்கு 10,000 ரூபாயும் தரும்படியும் லஞ்சம் கேட்டுள்ளார். இவர் பேசியதை செல்பேசியில் பதிவுசெய்த தட்சிணாமூர்த்தி ஆதாரத்துடன் வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் செய்தார். புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த சில நாட்களாக ரகசிய விசாரணை நடத்திவந்தனர்.
இந்நிலையில், நேற்று காலையில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி. பாலசுப்பிரமணி தலைமையில் ஆம்பூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் பிலிப் கென்னடியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி. பாலசுப்பிரமணி, ‘டி.எஸ்.பி. பிலிப் கென்னடி 50,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தட்சணாமூர்த்தி புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, டி.எஸ்.பி. பிலிப் கென்னடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பள்ளிகொண்டா காவல் ஆய்வாளரிடம் விசாரணை நடத்தப்படும். விசாரணை அறிக்கை துறையின் உயரதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் துறைரீதியாக அல்லது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், திருப்பூர் பெரியார் காலனியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸார், அவ்வழியே ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற தனஞ்செயன் வினோத் என்பவரை மடக்கிப் பிடித்து, ஓட்டுநர் உரிமம் இல்லை எனக்கூறி அவரிடம் 1,500 ரூபாய் பணம் கேட்டுள்ளனர். தனஞ்செயன் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என அவர் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் முத்துக்குமார் மன்னிப்புக் கேட்டுள்ளார். ஆனால் போலீஸார் 1,500 ரூபாய் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தியதால், முறைப்படி ரசீது தரவேண்டும் எனவும், ஒரு ரூபாய்கூட லஞ்சம் தரமுடியாது எனவும் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் சைதன் யூசப், மாற்றுத்திறனாளி முத்துக்குமாரை தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் பொதுமக்கள் சைதன் யூசுப்பை சுற்றி வளைத்து கேள்விகேட்கத் தொடங்கினர்.
அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், முத்துக்குமார் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக விசாரணை நடத்தி லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர் யூசுப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விரைவாக, தாங்கள் நினைத்த பணி முடிய வேண்டும் என்பதற்காக மக்கள் லஞ்சம் கொடுக்கின்றனர். லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம். மக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியும்.�,