டி.எஸ்.எஸ்.மணி
2020 ஆங்கில ஆண்டு தொடங்கிய நேரத்தில் ஜனவரி 12ஆம் நாள் சென்னை வந்திருந்த இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், நடிகர் ரஜினியைச் சந்தித்தார். இது வரவிருக்கும் இலங்கை தேர்தலுக்கும், அடுத்த ஆண்டு வரவிருக்கும் தமிழ்நாடு தேர்தலுக்கும் தேவையான ஒரு காய் நகர்த்தலாக இருக்குமோ என்ற வினாவும் எழாமல் இல்லை. இலங்கைத் தீவில் இப்போதுதான் ஒரு பொதுத் தேர்தல் முடிந்தது. மீண்டும் இன்னொரு பொதுத் தேர்தல் மார்ச் மாதம் அறிவிக்கப்பட இருக்கிறது. அதாவது, நடந்து முடிந்த பொதுத் தேர்தல், ஜனாதிபதிக்கான (குடியரசுத் தலைவருக்கான) அதிபரைத் தேர்வு செய்யும் பொதுத் தேர்தல். அதில்தான், இலங்கை பொதுஜன பெரமுனா (எஸ்எல்பிபி) கட்சியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றார். ஐக்கிய தேசியக் கட்சி (யுஎன்பி)யின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா வெற்றி பெறவில்லை. இலங்கை சுதந்திரக் கட்சி (எஸ்எல்எஃப்பி) என்ற மைத்திரிபால சிறிசேனா என்ற முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையிலான கட்சியிலிருந்து, முன்னாள் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சே, இலங்கை பொதுஜன பெரமுனா என்ற புதிய கட்சியை உருவாக்கினார். முன்னாள் தலைமை அமைச்சரான ரணில் விக்ரமசிங்கே தலைமையில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி இப்போது, சஜித் பிரேமதேசா என்ற முன்னாள் தலைமை அமைச்சர் பிரேமதேசாவின் மகன் தலைமையில் வந்துவிட்டது. தென்னிலங்கையில் உள்ள சிங்களர்கள் முழுக்க அல்லது ஆகப் பெரும்பான்மையினர், கோத்தபாய ராஜபக்சேவுக்கு வாக்களித்துள்ளார்கள். 68 லட்சம் வாக்குகளை கோத்தபாய பெற்றார். அதேநேரம், 55 லட்சம் வாக்குகளைத்தான் சஜித் பெற்றார். சஜித் பெற்ற வாக்குகளில் பெரும்பான்மை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம் அல்லாத தமிழர்கள் மற்றும் முஸ்லிம் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் ஆகியோரின் வாக்குகள் மட்டுமே 25 லட்சம் வாக்குகள் சஜித்திற்கு கிடைத்திருக்கும். மீதி சிங்களர்களில் சிறுபான்மை அளவே சஜித்திற்கு வாக்குகள் விழுந்தன. அதிபர் தேர்தலுக்கு, நிற்பவரும் சிங்கள, பெளத்தராக இருக்க வேண்டும் என்பதே அங்கே சட்டம். ஆகவேதான், தமிழர்களும் ஏதாவது ஒரு சிங்களருக்கே தங்கள் வாக்குகளைப் போட வேண்டிய நிலைமை இருக்கிறது. ஆனாலும், அதிபர் தேர்தல் முடிவு என்பது, இரண்டு சிங்கள வேட்பாளர்களில், ஒருவருக்கு ‘முழு சிங்களர்களும்’, மற்றவருக்கு ‘முழு தமிழர்களும்’ வாக்களித்துள்ளார்கள் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது. அதாவது, இலங்கையில் இருக்கும் இரண்டு தேசிய இனங்களும் எதிர் எதிர் திசையில் சிந்திக்கிறார்கள் என்பதை அங்கு நடந்து முடிந்த அதிபர் தேர்தல் படம் பிடித்துக் காட்டியுள்ளது. இதை அக்கறையுள்ள உலக சக்திகள் புரிந்துகொண்டால் நல்லது.
தோற்றுப்போன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்கே, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட கோத்தபாய, தனது அண்ணன் மஹிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்து விட்டார். ஆனாலும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே இப்போது சிறுபான்மை அரசாங்கத்தின் பிரதமர்தான். அதாவது அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. ஏன் என்றால், ரணில் கட்சிக்குத்தான், தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் இருக்கிறது. அதாவது இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள். அதில், பாதிக்கு மேல் 113 உறுப்பினர்கள் இருந்தால்தான், பெரும்பான்மையுடன் ஆட்சியை ஆள முடியும். ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மலையக தமிழர்களின் தமிழ் முற்போக்கு முன்னணி ஆகியவற்றின் கூட்டுத் தொகைதான் ரணில் தலைமையிலான ஆட்சியின் பெரும்பான்மை. இப்போது பெரும்பான்மை இல்லாத, மஹிந்த ராஜபக்சே ஆட்சியால், எந்த ஒரு சட்டத்தையும் கொண்டு வர முடியாது. பட்ஜெட் நிறைவேற்ற முடியாது. ஆகவே இப்போது இருப்பது ஒரு பொம்மை ஆட்சிதான். அதனால்தான், அவர்கள் ஒரு தேர்தலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்தி, பெரும்பான்மையை வெல்ல வேண்டும் எனது துடிக்கிறார்கள்.
இலங்கை நாடாளுமன்றத்திற்கு நாலரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதாவது வருகிற மார்ச் மாதம் இரண்டாம் தேதி நாலரை ஆண்டுகள் முடிவடைகிறது. ஆகவே ஜனாதிபதி, நாடாளுமன்றத்தை கலைத்து விட வேண்டும். அதன் பிறகு பொதுத் தேர்தலை அறிவிக்க வேண்டும். அதன்படி ஏப்ரல் 25இல் பொதுத் தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே, நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில், சிங்கள பெரும்பான்மையின் வாக்குகளை அள்ளிக்கொண்டு வந்துள்ள ராஜபக்சே குடும்பம், மீண்டும் வருகிற தேர்தலிலும், சிங்கள பகுதியான தென்னிலங்கையிலிருந்து, அதிகப்படியான எம்.பி.க்களை வென்று கொண்டு வந்துவிடுவர் என்ற மதிப்பீடு இருக்கிறது. ஆனாலும், சஜித் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தென்னிலங்கையில் விடாப்பிடியாக முயற்சி செய்கிறது. எப்படியும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் சஜித் தலைமையிலான கூட்டணியோ அல்லது ராஜபக்சே எதிர்ப்பு கட்சிகளோ, அதிக எம்.பி.க்களை வெற்றிபெற வைப்பார்கள் என்று தெரிகிறது.
தமிழர் பகுதிகளில் வழக்கமாக வெற்றி பெறும் இரா.சம்பந்தர் தலைமையிலான, தமிழ் தேசியக் கூட்டமைப்பு (டிஎன்ஏ) இந்த முறை சுருங்கிவிட்டது. அதாவது, அந்தக் கூட்டமைப்பில், மாவே.சேனாதிராஜா தலைமையிலான தமிழரசுக் கட்சி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ, சித்தார்த்தன் தலைமையிலான பிளாட் ஆகிய கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. அதாவது ததேகூலிருந்து விலகி, சி.வி.விக்னேஸ்வரன் தனது தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை என்ற கட்சியைத் தொடங்கிவிட்டார். அதேபோல,ததேகூலிருந்து விலகிய, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி விக்னேஸ்வரனுடன் கூட்டணியில் நிற்கிறது. அதேபோல, சிவாஜிலிங்கம் தலைமையிலான டெலோவும் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியில் நிற்கிறது. ஆகவே சென்ற முறைபோல இல்லாமல் இந்த முறை ராஜபக்சே எதிர்ப்பு தமிழர்கள் வாக்குகள் பிரியும் சூழல் உள்ளது. இது போதாதென்று, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் மக்கள் முன்னேற்ற முன்னணி தாங்களும் இந்த முறை வடக்கு மாகாணத்தில் போட்டி போட இருக்கிறோம் என்கிறார்கள். அதற்குப் பதில் கொடுப்பது போல, தமிழ் தேசியக் கூட்டமைப்பும், கொழும்பில் நிற்கப் போகிறோம் என்கிறார்கள். ஏற்கனவே ராஜபக்சே கூட்டணியில் உள்ள, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தனது செல்வாக்கு மண்டலத்தை,நெடுந்தீவில் தொடக்கி, யாழ் மாவட்டம் வரை விரிவாக்கி வைத்துள்ளார். இது தவிர கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேறு தனித்துப் போட்டியிடுவார். இவை எல்லாமே தமிழர்களின் வாக்குகளைப் பிரிக்கவே செய்யும். அதுவே, ராஜபக்சே குடும்பக் கட்சிக்கு உதவிகரமாக ஆகிவிடுமே என்று தமிழர்கள் மத்தியில் வருத்தமும் இருக்கிறது.
இதில், சம்பந்தர், சுமந்திரன் மீதான அதிருப்தியும், விக்னேஸ்வரன் மீதான எதிர்பார்ப்பும் புதிய கூட்டணிக்கு சாதகமாக இருக்கும். ஏன் என்றால், ரணில் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும்போதும் சரி, தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்தபோதும் சரி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த ஒரு தமிழர் நலன் சார்பு கோரிக்கைகளையும், நிபந்தனையாக வைக்காமல் ஒரு சிங்களரை ஆதரித்து விட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆகவே இந்த முறை முன்பு போல, தமிழர்கள் கண்களை மூடிக்கொண்டு, ததேகூவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதாகப் புரிகிறது. இதை ஓட்டியே, விக்னேஸ்வரனின், ரஜினி சந்திப்பும் பேசப்படுகிறது. ரஜினிக்கும் தமிழ்நாட்டு அரசியலில் களம் இறங்க, இலங்கை தமிழர்கள் பிரச்சினை கைகொடுக்கும் என நம்புகிறார்கள். அதேசமயம், ராஜபக்சே குடும்பத்திற்கு ஒரு முக்கிய கோரிக்கை உள்ளது. அதாவது இலங்கையில் 2015ஆம் ஆண்டு பிரதமராக வெற்றிபெற்று வந்த ரணில் விக்ரமசிங்கே, 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், இலங்கையில் இருந்த ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றி, பிரதமர் தலைமையிலான நாடாளுமன்ற ஆட்சி முறையாகக் கொண்டு வந்தார். அதன்மூலம், குடியரசுத் தலைவருக்கு இருந்த அதிகாரங்கள் பிரதமருக்கு வந்து விட்டன. அதற்கு முன்பு, நிர்வாக அதிபராக (Executive President) இருந்த ஜெ.ஆர்.ஜெயவர்த்தனேவின் 1978ஆம் ஆண்டுக் காலத்தில் ஜனாதிபதி ஆட்சி முறை அமலில் இருந்தது. தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி, ஆறு ஆண்டுகள் ஆளலாம். 18ஆவது திருத்தச் சட்டத்தின்படியே ஒரு ஜனாதிபதி இரு முறைதான் ஆளமுடியும். அதாவது, ஆறு + ஆறு என பன்னிரண்டு ஆண்டுகள்தான் ஆள முடியும். மஹிந்த ராஜபக்சே, ஜனாதிபதியாக இருந்தபோது இரண்டு ஆறு ஆண்டுகள் முடிந்த உடனே, 18ஆவது திருத்த சட்டத்துக்கு இன்னொரு திருத்தம் கொண்டு வந்து எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் ஒரு ஜனாதிபதி ஆளலாம் என்று கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால், அந்தத் தேர்தலில் அவர் தோற்று விட்டார். அப்போது, ரணில் உடன் சேர்ந்த மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்று வந்து விட்டார். ஆகவே, 19ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வந்து, அதிகாரங்களையும் ஜனாதிபதியிடமிருந்து பிரதமருக்கு மாற்றி விட்டார்கள். ஆகவே, இப்போது, இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் மஹிந்த ராஜபக்சே, மீண்டும் அரசியல் சாசனத்தையே திருத்த வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு கொண்ட எம்.பி.க்கள் வெற்றி பெற்று வர வேண்டும். அதற்கான முயற்சியில், ராஜபக்சே குடும்பத்தினர் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை. ஏன் என்றால், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இல்லாமல் அப்படியோர் எண்ணிக்கை கிடைக்காது. இப்போது இருக்கும் விகிதாச்சார முறை (Proportional Representation) ராஜபக்சே குடும்ப விருப்பங்களை நிறைவேற்ற தடையாக இருக்கும். ஆகவே அவர்கள் விகிதாச்சார முறையையே ஒழிக்க விரும்புகின்றனர்.
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையில் இருக்கும் தேர்தல் மாவட்டங்களுக்கு ஏற்றாற்போல, எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். நிர்வாக மாவட்டங்கள் வேறாகவும், தேர்தல் மாவட்டங்கள் வேறாகவும் இருக்கின்றன. அதாவது,வடக்கு மாகாணத்தில் உள்ள, யாழ்ப்பாண மாவட்டமும், கிளிநொச்சி மாவட்டமும் சேர்ந்து ஒரு தேர்தல் மாவட்டம் ஆகிறது. அதில், ஏழு எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். வடக்கு மாகாணத்தில் உள்ள, வன்னி தேர்தல் மாவட்டம் என்பது, முல்லைத் தீவு மாவட்டம், வவுனியா மாவட்டம், மன்னார் மாவட்டம் ஆகியவற்றைக் கொண்டது. அங்கிருந்து, ஆறு எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டம் ஒரு தேர்தல் மாவட்டம். அதிலிருந்து, நாலு எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்கிளப்பு மாவட்டம் ஒரு தேர்தல் மாவட்டம். அங்கிருந்து ஐந்து எம்.பி.க்கள் தேர்வு செய்யப் பட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டம் ஒரு தேர்தல் மாவட்டம். அதிலிருந்து, ஏழு எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இது தவிர தென்னிலங்கையில், 25 நிர்வாக மாவட்டங்கள் உள்ளன.
இப்போது, மஹிந்த ராஜபக்சே என்ற தற்காலிக இலங்கை பிரதமர் பிப்ரவரி ஏழாம் தேதி இந்தியா வருகிறார். இந்தியாவிற்குள் ஒரு பயணமே மேற்கொள்கிறார். மீண்டும் நாம் கட்டுரையில் தொடக்கத்தில் கூறிய ‘விக்னேஸ்வரன் – ரஜினி சந்திப்பு’ பற்றி பார்ப்போம். அந்தச் சந்திப்பு பற்றி, யாழ்ப்பாண சஞ்சிகை ஒன்றுக்கு நேர்காணல் கொடுத்த விக்னேஸ்வரன், வெள்ளந்தியாக ஒன்றைக் கூறியுள்ளார். ‘என்னிடம் ரஜினி உங்களைச் சந்திக்க விரும்புகிறார் என்று சொன்னார்கள். நானும் சரி, சந்திக்கலாம். எனது பிள்ளைகள் கூட ரஜினி ரசிகர்கள்தான் என்று கூறினேன். ரஜினியிடம் போய், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் உங்களைச் சந்திக்க விரும்புகிறார் என்று கூறியிருக்கிறார்கள்’ என்று சந்திப்புக்கான ரகசியத்தைப் போட்டு உடைத்து விட்டார். அதாவது, இரண்டு பேருக்கும் தெரியாமலே, வேறு சக்திகள் இருவரது சந்திப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளன என்பது தானே? அப்படி ஏற்பாடு செய்த ‘வெங்கட்’ யார் என்று நாமும் தேட வேண்டியதுதான்.�,