Wமுகிலனை ஆஜர்படுத்துமாறு வழக்கு!

Published On:

| By Balaji

காணாமல் போனதாகக் கூறப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கச் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடக் கோரி, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் முறையீடு செய்தார்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் தீவிரமாகச் செயலாற்றி வந்தார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கச் செயற்பாட்டாளரான முகிலன். 2017ஆம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட முகிலன் ஓராண்டுக்கும் மேலாக மதுரைச் சிறையில் இருந்தார். பின்னர், இவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் காவல் துறை தான் என்று குரல் எழுப்பினார் முகிலன். கடந்த வாரம் இது தொடர்பாகச் சென்னையில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். காவல் துறை உதவியுடன் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேற்றப்பட்டதாகக் கூறி, அது தொடர்பான வீடியோ ஆவணங்களையும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அத்தனை ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

தான் இந்த விவகாரத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருவதால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறியிருந்தார்.

கடந்த 16ஆம் தேதியன்று சென்னையில் இருந்து ஊருக்குப் போகத் திட்டமிட்டிருந்தார் முகிலன். அன்றைய தினம் ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் உள்ளவர்களிடம் உரையாடினார். இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி முதல் அவரைக் காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், இன்று (பிப்ரவரி 18) சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கச் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

இந்த வழக்கு, நீதிபதி சத்தியநாராயணன் அமர்வில் விசாரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று ஆட்கொணர்வு மனுக்களை விசாரிக்கும் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share