டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (மே 30) நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்ட 24 கேபினட் அமைச்சர்களும், 9 தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களும், 24 இணையமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். 57 பேர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற நிலையில், இவர்களில் ஒருவர்கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை.
2014 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றார். இந்த முறை தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட 5 இடங்களிலும் தோல்வியைத் தழுவியதால், தமிழக பாஜகவிலிருந்து யாரும் மத்திய அமைச்சராக முடியாத சூழல் ஏற்பட்டது. தமிழக பாஜக தலைவர்கள் சிலர் டெல்லியில் முகாமிட்டு ராஜ்யசபா மூலமாக அமைச்சராக முயற்சி செய்தனர். இதனால் தமிழக பாஜகவிலிருந்து ஒருவர் அமைச்சராக்கப்படலாம் என்றும், அவர்களுக்காக அதிமுகவின் ராஜ்யசபா இடங்களில் ஒன்றை பாஜக கேட்டுப்பெறலாம் என்றும் தகவல் வெளியானது.
இது நடைபெறவில்லை என்றாலும்கூட கூட்டணி அடிப்படையில் அதிமுகவுக்கு ஓர் அமைச்சர் பதவி ஒதுக்கப்படும். அதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்தவர் எம்.பி ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக அதிமுக – பாஜக கூட்டணி தமிழகத்தில் வென்ற ஒரே இடமான தேனி தொகுதியின் எம்.பி ரவீந்திரநாத், மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோரில் ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று பேசப்பட்டது. பிரதமர் அலுவலகத்திலிருந்து ரவீந்திரநாத்துக்கு அழைப்பு வந்ததாகவும், அவர் மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்க உள்ளார் என்று கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து அனைத்து முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் மட்டுமே, நேற்று காலை 7 மணி பதிப்பிலேயே [மத்திய அமைச்சரவையில் தமிழ்நாடு இடம்பெறுமா?](https://minnambalam.com/k/2019/05/30/29) என்ற செய்தி வெளியிட்டோம். அதில், “நரேந்திர மோடியும் அமித் ஷாவும் நடத்திய நீண்ட நெடும் ஆலோசனைக்குப்பின் தமிழகத்துக்கு உடனடியாக அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது” என்று வெளியிட்டோம்.
இதன் தொடர்ச்சியாக நாம் நேற்று மாலை 7 மணிப் பதிப்பில் [மத்திய அமைச்சர்: ஓபிஎஸ் மகனுக்கு எடப்பாடி கடும் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/05/30/80) என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில், “ரவீந்திரநாத் அமைச்சராக தம்பிதுரை, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பாஜகவின் முக்கிய பிரமுகர்களைத் தொடர்புகொண்ட எடப்பாடி, ‘அதிமுகவுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்க முடிந்தால் கொடுங்க. ரவீந்திரநாத்துக்கு மட்டும் மத்திய அமைச்சர் பதவி என்றால் அது எங்கள் கட்சிக்குள் தேவையில்லாத சிக்கல்களை ஏற்படுத்திவிடும். எனவே, அதிமுக சார்பில் யாருக்கும் அமைச்சர் பதவி வேண்டாம்’ என்று வலியுறுத்தியிருக்கிறார். எடப்பாடியின் எதிர்ப்புக்கு என்ன பதில் என்று அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தெரிந்துவிடும்” என்று குறிப்பிட்டிருந்தோம். இந்த நிலையில் பதவியேற்பு விழாவில் அதிமுக தரப்பிலிருந்தும் யாரும் அமைச்சர்களாகப் பதவி ஏற்கவில்லை.
இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட அங்கம் வகிக்காத மத்திய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டுள்ளது. கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்ற நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றாலும்கூட இருவரும் பொன்.ராதாகிருஷ்ணன் போன்று தமிழகத்தில் வசித்து, தமிழ் நிலத்தில் அரசியல் செய்பவர்கள் இல்லை.
ஏற்கெனவே தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக விமர்சனம் இருந்துவரும் நிலையில், இதுதொடர்பாக பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, “ஏற்கனவே தமிழகத்தில் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு இருந்துவருகிறது. இதனால்தான் இந்தியா முழுவதும் வெற்றிபெற்றிருக்க தமிழகத்தில் தோல்வியைத் தழுவினோம். இந்த சமயத்தில் தமிழகத்துக்கு உடனே மத்திய அமைச்சர் பதவி வழங்கினால் அது தமிழக மக்களை தாஜா செய்வது போல ஆகிவிடும். எனவே தற்போது வேண்டாம், விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போது தமிழகத்துக்குப் பிரதிநிதித்துவம் வழங்கலாம் என்று மோடியும் அமித் ஷாவும் முடிவு செய்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தனர்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[மத்திய அமைச்சர்: ஓபிஎஸ் மகனுக்கு எடப்பாடி கடும் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/05/30/80)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு இளைஞரணி: ஸ்டாலினுக்கு நெருக்கடி!](https://minnambalam.com/k/2019/05/30/79)
**
.
**
[முதல்வர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு: முழு ரிப்போர்ட்!](https://minnambalam.com/k/2019/05/30/18)
**
.
**
[என்ன செய்திருந்தால் ராகுல் வென்றிருப்பார்!?](https://minnambalam.com/k/2019/05/30/23)
**
.
**
[காங்கிரஸ் தலைவராக தலித்?](https://minnambalam.com/k/2019/05/30/53)
**
.
.
�,”