wபேஸ்புக்கில் பாஜக ஆதரவு பக்கங்கள் முடக்கம்!

Published On:

| By Balaji

பேஸ்புக் நிறுவனத்தின் கொள்கை வரம்புகளை மீறியதாக சுமார் 200 பாஜக ஆதரவு பக்கங்களை அந்நிறுவனம் நேற்று நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் 17ஆவது மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பேஸ்புக் நிறுவனம் போலியான செய்திகள், போலியான குழுக்கள் மற்றும் போலியாக இயங்கும் பக்கங்களைக் கண்டறிந்து நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக்கில் அரசியல் மற்றும் சமூக ரீதியாகப் போலிச் செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் விதமாக இப்பணியில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான 687 பக்கங்களை இவ்வாறு நீக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் நேற்று (ஏப்ரல் 1) அறிவித்தது.

காங்கிரஸ் பக்கங்கள் மட்டுமின்றி நேற்று பாஜக ஆதரவு பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மற்ற எல்லாக் கட்சிகளையும் விட சமூக ஊடகங்களில் தேர்தல் விளம்பரங்களுக்கு பாஜக கூடுதல் முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பேஸ்புக் விளம்பரங்களுக்கு பாஜக ஆதரவு பக்கங்களே மற்ற எல்லா கட்சிகளை விடவும் அதிக பணம் செலவழித்துள்ளன. இந்நிலையில் நேற்று சுமார் 200 பாஜக ஆதரவு பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளதாக *தி பிரிண்ட்* ஊடகம் தெரிவித்துள்ளது.

”குஜராத்தைச் சேர்ந்த சில்வர் டச் என்ற நிறுவனம் பாஜகவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிறுவனம் பேஸ்புக்கில் இயக்கி வந்த 15 பக்கங்கள் அல்லது குழுக்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமான பக்கமாக *தி இந்தியன் ஐ* இருந்தது. இந்த பக்கத்தை 26 லட்சம் பேர் பின் தொடர்ந்திருந்தனர். இந்தப் பக்கத்தில் போலி செய்திகள் பகிரப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது. இந்த சில்வர் டச் நிறுவனம்தான் பிரதமரின் நமோ செயலியை இயக்கி வருகிறது. வலதுசாரிகள் மற்றும் பாஜக ஆதரவு பக்கங்கள் என பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட சுமார் 200 பக்கங்கள் வரை நீக்கப்பட்டுள்ளதாக பல்வேறு ஆதாரங்கள் கூறுகின்றன ” என்று தி பிரிண்ட் தெரிவித்துள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share