Wபுளித்துப்போன உறவை வீசிவிடலாமா?

Published On:

| By Balaji

சத்குரு ஜகி வாசுதேவ்

**கேள்வி:** ஆன்மிகப் பாதையில் படியெடுத்து வைத்தவுடன் எனது வாழ்க்கைத் துணை இனி எனக்குச் சரிப்பட்டு வர மாட்டார் என்று தோன்றுகிறது. இந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாள்வது?

**சத்குரு:** அவரை உதறிவிட்டு அடுத்த ஆளைத் தேர்ந்தெடுங்கள் என்று நான் நிச்சயம் சொல்ல மாட்டேன். இந்த எண்ணம் தோன்றுவதற்கு ஆன்மிகம் என்றல்ல, பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம். காதலுக்காக ஒருவர், ஆன்மிகத்திற்காக இன்னொருவர், இன்பத்திற்காக வேறொருவர் எனத் தேவைக்கேற்ப மாற்றலாம். எப்போது மனிதர்களை வெறும் தேவைக்கு உதவும் பொருளாய் நீங்கள் நினைக்க ஆரம்பிக்கிறீர்களோ, வாழ்வின் அடிப்படையை நீங்கள் தவறவிட்டுவிடுவீர்கள். இதற்கு ஒரு விலை உண்டு. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்விளைவு உண்டு.

நீங்கள் எத்தனை மாடர்னான ஆளாக இருந்தாலும், பொறாமையின் பிடியிலிருந்து, வேண்டிக் கிடைக்காதவற்றின் வலியிலிருந்து நீங்கள் தப்ப முடியவில்லை. சொல்லுங்கள்… கணவன் எங்கு சென்றாலும், மனைவி உங்களை விட்டுப் பிரிந்து சென்றாலும், ‘அதனால் என்ன?’ என்று அதை அப்படியே ஏற்கிற பக்குவம் உங்களுக்கு வந்துவிட்டதா? இல்லை. இவையெல்லாம் உங்களை பாதிக்கின்றன. நீங்கள் பலரை வேண்டாம் என்று ஒதுக்கியிருப்பீர்கள். ஆனாலும், உங்களை ஒருவர் ஒதுக்கினாலோ, அல்லது குறைவாக எண்ணினாலோ உங்களால் பொறுக்க முடிவதில்லை.

உலகம் முழுவதிலும் மக்கள் ஏதோ ஒருவிதமான திருமண அமைப்பிற்கு உடன்பட்டிருக்கிறார்கள். வெவ்வேறு சமூகங்கள் இதனை வெவ்வேறு விதமாகக் கையாண்டிருந்தாலும் பொறுப்பேற்பதும் நம்பிக்கை அளிப்பதும் உறுதியோடு உடன் இருப்பதும் அதன் அடிப்படைக் கட்டமைப்பாக இருந்திருக்கிறது. இரண்டு மனிதர்கள் அந்நியோன்யமாக, மிக நெருக்கமாக வாழவேண்டுமெனில், இருவருக்குமிடையே ஒரு நம்பிக்கையான சூழ்நிலை அவசியம். இந்த நம்பிக்கை உணர்வில்லாமல் நிகழும் நெருக்கங்கள் அம்மனிதரை நிலைகுலையச் செய்வதுடன், சமுதாயச் சீர்குலைவிற்கும் வித்திடும்.

5000 வருடங்களுக்கு முன் கிருஷ்ணர் இதைப் பற்றிப் பேசினார். குழந்தைகள் மனநிலை குறித்து அவர் அற்புதமாய் கொடுத்த விளக்கம்: “நம்பிக்கையற்ற, உறுதியற்ற உறவுகளில் மனிதர்கள் வாழ்ந்து, அந்தச் சூழலில் பிள்ளைகள், ‘தன் தாய், தன் தந்தை’ என்று அடையாளம் கொண்டு, உரிமையோடு வளர முடியாமல் போகும்போது, அக்குழந்தை அற்புதமான ஒரு மனிதனாய் வளர்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.”

இது இப்படித்தான் என்று திட்டவட்டமாகச் சொல்லவில்லை என்றாலும், இதுதான் பொதுப்படையான நிலை. அரவணைக்கப் பெற்றோர்கள் இல்லாத நிலையிலும் ஒரு குழந்தை தன்னளவிலேயே நேர்மையான, ஸ்திரமான குழந்தையாக இருந்தால் அது நல்லபடியாக வளரும்தான். ஆனால், வளரும் காலத்தில் இதுபோன்ற குழப்பத்தில் குழந்தைகள் உழன்றால், பின் அவர்கள் வாழ்க்கை முழுவதும் இந்தக் குழப்பம் தொடரும்.

**ருனானு பந்தம்**

இவை எல்லாவற்றிற்கும் மேலாக மனித உடலுக்கென்று ஒரு நினைவாற்றல் இருக்கிறது. இதனை யோகத்தில் ‘ருனானு பந்தம்‘ என்போம். நீங்கள் உண்ணும் உணவோ, வாழும் சூழலோ எல்லாவற்றையும் உடல் ஞாபகத்தில் வைத்திருக்கிறது. ஒருவேளை நீங்கள் மற்றொரு ஜென்மம் எடுத்து வந்தால், உங்கள் உடலிற்கு அத்தனை ஞாபகமும் இருக்கும். அதிலும் குறிப்பாக, உடலளவில் மிக நெருக்கமான சம்பந்தங்கள் ஏற்பட்டிருந்தால், அவை ருனானு பந்தத்தில் மிக வலிதாய் பதிவாகி இருக்கும்.

இந்தக் கலாச்சாரத்தில், தாங்கள் வாழும் இடத்தைப் பற்றி மக்கள் அதிக கவனம் எடுத்துக்கொண்டனர். இதனாலேயே ஒரு நாளை எவ்வாறு துவங்குவது, வீட்டை எவ்வாறு பராமரிப்பது, வீட்டில் எப்போதும் ஒரு விளக்கு ஒளிர்ந்துகொண்டிருக்க வேண்டும் என்று பல வழிமுறைகளை உருவாக்கிவைத்தனர்.

உங்களுக்கு சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கக்கூடிய அறிவு இல்லாவிட்டாலும்,உங்கள் உடலில் சரியான பதிவுகள் இருந்தால், அது உங்களைச் சரியான திசையில் செலுத்திடும். தவறான பதிவுகளைக் கொண்டிருந்தால், உங்களையும் மீறி, வேறு வழியில் அது உங்களை இழுத்துச் சென்றிடும். இத்தனை ஏன், யாரோ ஒரு மனிதர் உங்களைத் தொடுவதுகூட உங்கள் மீது ஒரு குறிப்பிட்ட பதிவை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

‘மரணம் நம்மைப் பிரிக்கும் வரை’ என்ற வாசகம் கேட்டிருப்பீர்கள்… இந்த அளவிற்கு நம்பிக்கையும், உறுதியும் இல்லாமல், உடலளவிலான நெருக்கங்கள் கூடாது.

நாம் உருவாக்கி வைத்த அடிப்படைகளை நவீனம் என்ற பெயரில் தளர்த்திக்கொண்டிருக்கிறோம். இதற்குப் பெருத்த விலை கொடுக்கப்போகிறோம் என்பது நிச்சயம். இதுபோன்ற சூழ்நிலை, உணர்வுநிலையிலான பாதுகாப்பின்மையை உண்டாக்கும். உங்களுக்குள் பாதுகாப்பின்மை மேலோங்கி நிற்கும்போது உங்கள் மனமும் உடலும் தன் முழுத் திறனுடன் செயல்படாது.

**பிழையில் உங்களுக்கும் பங்கு உண்டு**

உங்கள் உறவு பல வழிகளிலும் முறிந்து, அதை ஒட்ட வைக்க நீங்கள் மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டது என்றாலோ, அல்லது அதில் வன்முறையும் வக்கிரமும் அதிகரித்திட்டது என்றாலோ, அதை விட்டு வெளியேற உங்களுக்கு எல்லா விதமான உரிமையும் உண்டு. ஆனால் இதுபோல் உறவை முறித்துக்கொண்டு நீங்கள் வெளிவந்தால், போதுமான அளவிற்கு அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள். முறிந்த உறவில் எது தவறாகிப்போயிருந்தாலும், அதில் உங்களுக்கு நிச்சயம் 50% பங்கு உண்டு. அதனால் அந்த 50%ஐச் சரி செய்துகொள்ளக் குறைந்தது ஆறு மாதமோ ஒரு வருடமோ அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள். தவறாகிப்போன ஓர் உறவிலிருந்து இப்போதுதான் வெளிவந்திருக்கிறீர்கள். அதே போன்று மற்றுமொரு தவறில் சிக்க வேண்டாம் எனில், அப்பழைய உறவு உடைவதற்குக் காரணமாக இருந்த உங்கள் பங்களிப்பைத் திருத்திக்கொள்ளுங்கள். இதுதான் வாழ்வைப் பொறுப்புடன் கையாளும் வழி.

ஆன்மிகத்தின் பெயரில் பொறுப்பற்ற செயல்கள் நிறையவே நிகழ்ந்துவிட்டன. அதனால் உங்கள் வாழ்க்கைத் துணையை மாற்றிக்கொள்ள ஆன்மிகத்தைச் சாக்காகப் பயன்படுத்தாதீர்கள். உண்மையாகவே உங்களுக்கு வளர வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தால், யாரைப் பிடிக்காதோ அவருடன் சேர்ந்து வாழ்வது மிக அவசியம். நம் ஆசிரமத்திலும், ஈஷாவின் பிற பணிகளிலும், ஒருவருக்கு ஒருவர் ஒவ்வாத மனிதர்களை ஒரு செயலில் சேர்ந்து ஈடுபடச் செய்வேன். இது பல சமயங்களில் அச்செயலைச் சிக்கலுக்கு உள்ளாக்கிவிடுகிறது. இருந்தாலும் இதை நான் செய்யக் காரணம், என் நோக்கம் அதிக அளவு வேலையைச் சாதிப்பது அல்ல… மனிதர்களின் வாழ்வைச் சீரமைப்பதுதான்.

நமக்கு வேலை நடக்க வேண்டும். ஆனால், அதை விட முக்கியம், இந்த வேலைகளைச் செய்யும்போது, மனிதர்கள் வளர்கிறார்களா, அல்லது அவற்றோடு சிக்கிப்போகிறார்களா என்பது தான். இந்த விஷயம் கவனிக்கப்படவில்லை என்றால் மக்கள் எதற்காக ஈஷாவில் வேலை செய்ய வேண்டும்? அவர்கள் வேறேதோ ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்யலாமே? கை நிறைய ஊதியமாவது கிடைக்கும்! இங்கு நீங்கள் ஈடுபடும் செயல்கள், நீங்கள் வளர்வதற்குத்தானே அன்றி, வேலை செய்வதற்காக அல்ல. இங்கு செய்ய வேண்டிய வேலை நிறையவே இருக்கிறது. அடிப்படை வசதிகள் இன்றி வாழ்வில் முன்னேற சிரமப்படும் பலருக்கு, ஏதுவான சூழ்நிலைகளை அமைக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஆனால், இது எல்லாவற்றையும்விட முக்கியம், நீங்கள் உங்கள் கட்டுப்பாடுகளைத் தாண்டி வளர்வது.

“அவருள் சரியான சக்தி சூழ்நிலை இல்லை,” “அவர் அப்படித்தான்” என்று நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையின் மேல் குறைகளைப் பட்டியலிட்டாலும், இவை யாவும் உங்கள் திருமண உறவை முறிப்பதற்குப் போதிய காரணங்கள் அல்ல. உறவு உண்மையிலேயே பொறுக்க முடியாத அளவிற்குத் துன்பமாய் இருந்தால், அதை விட்டு வெளிவர அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் புளித்த பழம் பிடிக்கவில்லை என்பது போல், ‘சரிவரவில்லை’ என்று உறவையும் தூக்கி எறிய வேண்டாம். அந்த மனிதர்களை நம் வழிக்கு மாற்ற நிறைய வழிகள் இருக்கின்றன.

**உயிருக்கு எது சரி?**

மேற்கத்தியச் சமூகங்களில் பலரும் மனதளவில் ஆழமான வலியோடு வாழ்வதைக் காண்கிறேன். அங்கு வெகு சிலரே நம்பிக்கையான, உறுதியான உறவுகளில் சந்தோஷமாக வாழ்கின்றனர். மற்றவர்களிடம் எப்போதுமே ஒரு பாதுகாப்பின்மை நிலவுகிறது. ‘சுதந்திரம்’ என்று நினைத்து அவர்கள் ஆரம்பித்த இந்த வாழ்க்கைமுறை தீராத வலியில், நம்பிக்கையற்ற சூழலில், பாதுகாப்பின்மையை உண்டாக்கியிருக்கிறது. இதைச் சுதந்திரமான வாழ்க்கை என்று சொல்லிக்கொள்ள முடியாது. உணர்வுரீதியாக இப்படித் தடுமாற்றத்தில் தத்தளிப்பது கொடூரமான பிணைப்பு.

பயனுள்ளதாக ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்றால், எப்போதும் திறமையாக, தெளிவாக வேலை செய்ய வேண்டும் என்றால், ஒவ்வொரு மனிதனுக்கும் நிதானமான, நிலையான மனநிலை வேண்டும். உங்களுக்கு உறவு தேவையில்லை என்றால், உங்கள் கண்களை மூடி உங்களால் சுகமாக அமர முடியுமென்றால், அனைவரையும் விட்டு விலக உங்களுக்கு பரிபூரண சுதந்திரம் உண்டு. ஆனால் இவர், அவர், அவர் என்று தேவைக்கேற்ப மனிதர்களை மாற்றிக்கொண்டே இருப்பது சரிவராது.

நான் எவ்வித நெறிகளையும் போதிப்பதில்லை. இது சரி, அது தவறு என்றும் சொல்லவில்லை. நம் உயிருக்கு எது வேலை செய்யுமோ, அதையே நாம் செய்ய வேண்டும்.

**

மேலும் படிக்க

**

**

[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)

**

**

[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)

**

**

[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)

**

**

[12ஆம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்ற சிவாஜி](https://minnambalam.com/k/2019/06/07/16)

**

**

[மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!](https://minnambalam.com/k/2019/06/07/53)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share