காஷ்மீர் எல்லையிலுள்ள ஷாபூர், கெர்னி பகுதிகளில் அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஓர் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி, ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் பலியானதாகத் தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சகச் செய்தித்தொடர்பாளர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள மான்கோட் அருகே எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று (ஏப்ரல் 1) பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். இது மட்டுமல்லாமல் ஷாபூர், கிர்னி, கஸ்பா, மெந்தார், பாலகோட், டப்ராஜ், சக்ரா, பலோனி என்று எல்லைக்கோட்டுப் பகுதியிலுள்ள இடங்களில் ஒரே நேரத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியிட்டுள்ளது பாதுகாப்புத் துறை.
துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார் குண்டுகளை வீசியும் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பயன்படுத்திய குண்டுகள் சுமார் 4-5 கிலோமீட்டர் தூரம் வரை பாயும் திறன் கொண்டது. இதையடுத்து, அப்பகுதிகளிலுள்ள பள்ளிகள் மூடப்பட்டன. வீடுகளிலிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஆய்வாளர் அலெக்ஸ் லால்மின்லுன், சஜ்யத் பீ என்ற பெண்மணி மற்றும் சோபியா கோசர் எனும் ஐந்து வயது சிறுமி ஆகியோர் பலியாகினர். 19 பேர் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளனர். இவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் 4 எஃப்16 ரக பாகிஸ்தான் விமானங்கள் மற்றும் ஆளில்லா ரோந்து விமானம் ஒன்று ஆகியன எல்லைப்பகுதியிலுள்ள கெம்கரன் என்ற இடத்தின் அருகே வந்ததாக இந்திய ராடார் கருவிகளில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, இந்திய விமானப் படை விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.�,