Wபட்ஜெட்டில் குறைகள்: விஜயகாந்த்

Published On:

| By Balaji

பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

2020-21ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதற்கு பாஜகவினர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. குறிப்பாக தனியார் மயம் என்கிற வார்த்தை பட்ஜெட்டில் அதிக அளவில் வந்திருப்பதாக விமர்சனங்கள் வந்துள்ளன. இந்த நிலையில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான தேமுதிகவும் பட்ஜெட்டில் குறைகள் உள்ளதாக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று (பிப்ரவரி 2) கருத்து தெரிவித்துள்ள தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், “வளர்ச்சி என்று பார்த்தால் வருமான வரி விகிதம் குறைப்பு, வீட்டுக் கடன் சலுகை, விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன், வேளாண்மை உள்கட்டமைப்பு, ஜவுளி தொழில்நுட்பம், ஆகியவற்றில் வேலை வாய்ப்பை உருவாக்குவது, விவசாயத்தை இரட்டிப்பாக்குவது, ஏற்றுமதியை ஊக்குவிப்பது என்று பல வரவேற்கக்கூடிய அம்சங்கள் இருக்கும் பொழுதும், பல குறைகளும் இருக்கின்றது” என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய பொருளாதாரத்தின் நிலையை அறிந்து தனிநபரின் வருமானத்தை உயர்த்த கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது என்று கூறியுள்ள விஜயகாந்த், “பல கோடி பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். வேலைவாய்ப்பை உயர்த்துவதற்கு நல்ல செயல் திட்டங்களை அறிவிக்கவில்லை” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “விவசாயத்திற்கு பெரிதும் உதவும் நதிகள் இணைப்புக்காக எந்த ஒரு அறிவிப்பும் இந்த மத்திய பட்ஜெட் திட்டத்தில் இல்லை. எனவே குறைகளும் நிறைந்திருக்கிறது. மத்திய அரசின் இந்த பட்ஜெட் நிறைகளும், குறைகளும் இணைந்த மத்திய அம்சம் கொண்ட மத்திய பட்ஜெட்டாகவே பார்க்கமுடிகிறது” என்றும் கருத்து தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share