நீண்ட இழுபறிக்குப் பின்னர் சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின்போது மிகவும் கவனிக்கப்பட்ட சில தொகுதிகளில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியும் ஒன்று. இந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து போட்டியிட்ட ஒரே அரசியல் கட்சித் தலைவர் அவர்தான். அதிமுக சார்பில் அவரை எதிர்த்து சந்திரசேகர் களமிறக்கப்பட்டார். நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திருமாவளவன், சந்திரசேகர் என இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். ஒரு கட்டத்தில் சுமார் 10,000 வாக்குகள் முன்னிலை பெற்ற திருமாவளவன், அதன் பின்னர் பின்னடைவைச் சந்தித்தார்.
மதியத்துக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கத் தாமதம் செய்வதாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விசிகவினர் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அருகிலிருக்கும் மாவட்டங்களிலிருந்து விசிகவினர் வாக்குகள் எண்ணப்படும் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரிக்குத் திரள ஆரம்பித்துவிட்டதால் திருச்சி மண்டல ஐஜி வரதராஜுலு தலைமையில் கல்லூரி வளாகத்தில் காவல் துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். கார், இருசக்கர வாகனம் மூலமாக வாக்கு எண்ணும் மையம் நோக்கிச் சென்ற விசிகவினரை இடைமறித்து திருப்பி அனுப்பினர்.
இந்த நிலையில் மாலை 6 மணிக்கு திருமாவளவன் மீண்டும் முன்னிலை பெற்றார். ஆனால், சிறிது நேரத்திலேயே பின்னடைவைச் சந்தித்தார். சுமார் 10 மணியளவில் திருமாவளவன் மீண்டும் முன்னிலை பெறத் துவங்கினார். அதன்பிறகு அவர்தான் தொடர்ந்து முன்னிலையில் இருந்துவந்தார். திருமாவளவன் வெற்றிபெற்ற அறிவிப்பை வேண்டுமென்றே தாமதம் செய்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்தன. திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டரில், “ஆம் எல்லோரையும் போல் வெற்றி தலித்துகளுக்கு அவ்வளவு சுலபம் இல்லை! அது தனித் தொகுதியாக இருந்தாலும்!! #சிதம்பரம்” என்று விமர்சித்திருந்தார்.
தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவில் திருமாவளவனுக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்தன. மொத்தம் பதிவான 3,807 தபால் வாக்குகளில் 1,828 வாக்குகள் திருமாவளவனுக்கும், 1,578 வாக்குகள் சந்திரசேகருக்கும் விழுந்தது. இதற்கிடையே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையிலும் திருமாவளவன் வெற்றிபெற்றுவிட்டதாகக் கூறி சென்னை உள்பட பல்வேறு இடங்களில் விசிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.
இறுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 4,97,010 வாக்குகள் பெற்றார். கடும் இழுபறிக்குப் பிறகு, சுமார் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.�,