ராணுவ செயல்பாடுகளை தேர்தல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென்று முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்திய கடற்படையின் முன்னாள் தலைமை அதிகாரியாக இருந்தவர் எல்.ராம்தாஸ். புல்வாமா தாக்குதல், இந்தியாவின் பாலகோட் பதிலடி தாக்குதல் மற்றும் அபிநந்தன் பாகிஸ்தானிடம் பிடிபட்டு மீண்டது போன்றவை குறித்து தேர்தல் கட்சிகள் வார்த்தை தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் சமயத்தில் இவற்றைப் பயன்படுத்துவதைத் தேர்தல் ஆணையம் தலையிட்டு தடுக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு இவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் சமீபத்திய நிகழ்வுகளை எந்தவொரு அரசியல் கட்சியும் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே முக்கியம். தேர்தல் வெற்றிக்காக புல்வாமா தாக்குதல், இந்திய பதிலடி தாக்குதல் மற்றும் அபிநந்தன் விவகாரத்தை எந்தக் கட்சியினரும் பயன்படுத்தக்கூடாது. இராணுவத்தின் செயல்பாடுகளை, படங்களை அல்லது வேறுவிதமான தகவல்களை பயன்படுத்தக்கூடாது என்று கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இரண்டு பக்கங்களைக் கொண்ட இந்தக் கடிதத்தில், “ஒரு பொறுப்பான இந்தியக் குடிமகனாகவும், முன்னாள் ராணுவ வீரன் என்ற முறையிலும் தேர்தல் ஆதாயத்துக்காக அரசியல் கட்சியினர் ராணுவத்தின் படங்களையோ, உடைகளையோ அல்லது ராணுவ செயல்பாட்டு தகவல்களைப் பொதுவெளியில் (ஊடகங்களில், பொது நிகழ்ச்சிகளில்) பகிர்ந்தால் அதை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வருவேன்” என்றும் கூறியுள்ளார்.�,