wதெரிந்த பெயர் தெரியாத தகவல் – 4 – கல்பனா சாவ்லா

public

இன்றையச் சூழலை போன்றல்லாமல் 1990களில் கிராமத்திலிருந்து பெண்கள் அமெரிக்கா வரை சென்று படிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதிலும் குறிப்பாக, விண்வெளி மற்றும் ஏரோஸ்பேஸ் எனப்படும் வான் சார்ந்த படிப்புகளை பற்றின விழிப்புணர்வு இந்தியாவில் வரும் முன்னரே அந்தத் துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் கல்பனா சாவ்லா. இந்தியாவிலிருந்து ஒரு பெண் விண்வெளியில் பயணம் செய்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட செய்திகள், அவர் இறந்த செய்தியோடுதான் நமக்கு வந்து சேர்ந்தது என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. இன்றும், நம்நாட்டு பெண்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் கல்பனா சாவ்லாவை பற்றி இங்கு தெரிந்துக்கொள்வோம்.

சிறுவயதில் தோன்றிய பறக்கும் கனவு

கல்பனா சாவ்லா மார்ச் மாதம் 27ம் தேதி 1962ம் ஆண்டில் ஹரியானா மாநிலத்தின் கர்னல் என்ற இடத்தில் பிறந்தார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த கல்பனாவிற்கு சிறு வயதிலிருந்தே விமானங்களும், உயர பறந்து மேலிருந்து கீழ் உலகத்தை பார்ப்பதில் தான் ஆர்வம் மேலோங்கி இருந்தது. வகுப்பில் முதல் மதிப்பெண் பெறாத மாணவியாக இருந்தாலும், பாடங்களை புரிந்துக்கொள்வதிலும், கற்றுக்கொண்டதை சரியாக பிரயோகிப்பதிலும் கல்பனா தனக்கான தனி அடையாளத்தை சிறு வயதிலியே பெற்றிருந்தார். இவருடைய குழந்தை மற்றும் பள்ளிப்பருவங்களை பற்றி கல்பனாவின் தாயார் நினைவு கூறுகையில், ”மற்ற குழந்தைகளை போல கல்பனா என்றும் நடந்துக்கொண்டதே இல்லை. பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு பதிலாக, சின்ன சின்ன விமானம் போன்ற பொம்மைகளை வைத்து அதிகமாக விளையாடினாள். முடியை சின்னதாக வெட்டிக்கொண்டும், தைரியமாக பேசுவதும், கராத்தே போன்ற தற்காப்பு பயிற்சிகள் கற்கவும் ஆரம்பித்தாள்.” என்கிறார்.

கல்பனா சாவ்லா ஏரோஸ்பேஸ் துறையில் படிக்க வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருந்தார். ஹரியானாவின் சில தனியார் பறக்கும் கிளப்களில் சேர்ந்து அங்கிருக்கும் சின்ன சின்ன விமானங்களில் பழகிக்கொள்ளவும் செய்தார். ”அப்போது என்னுடைய தந்தையிடம் அடிக்கடி அடம்பிடித்து இந்த தனியார் கிளப்களில் செல்வது வழக்கமாக வைத்திருந்தேன். நான் கேட்டதிற்காக, க்ளைடர் மற்றும் புஷ்பக் என்ற சிறிய வகையான விமானங்களில் ஞாயிறு தோறும் அழைத்தும் செல்வார்.” என்று நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கல்பனா பகிர்ந்துக்கொண்டார். சக மாணவர்களிடையே கல்பனா தனித்து தெரிவதும் உண்டு. சிறுமியாக இருந்த போதே, மலைகள், சூரியன் என்று மட்டுமல்லாமல் ஒரு சின்ன விமானத்தையும் சேர்த்து இவர் வரைவது ஆசிரியர்களுக்கு அப்போது ஆச்சரியமாக இருந்தது. இந்த சின்ன கிறுக்கல் ஓவியத்திலிருந்து கல்பனா மற்ற மாணவர்களை விட சற்று வித்தியாசமானவள் என்று அவர்களுக்கு புலப்பட்டது. வகுப்புகளில் கொடுத்த பாடங்களில் விண்வெளி சம்பந்தமான தலைப்புகளில் அதிக ஆர்வமாக கவனத்துடன் கல்பனா கலந்துக்கொண்டதிலிருந்து, இவர் ஒரு நாள் மேலே உயர செல்லக்கூடிய திறன் கொண்டவர் என்பதை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், வீட்டில் உள்ளவர்களும் உணர்ந்தனர். பெண்கள் அதிகமாக விண்வெளியில் பயணம் செய்யாத நிலையை மிக சுருக்கமாக வகுப்பில் கல்பனா சாவ்லா கூறியதை சில ஆசிரியர்கள் பகிர்ந்துக்கொண்டனர். கணக்கு பாடத்தில் ‘எம்டி செட்’ என்பதற்கு ஒன்றும் இல்லாத ஒரு கூட்டு என்பது பொருள், இதற்கு ஒரு உதாரணம் கூறுமாறு, மாணவர்களை கேட்டபோது உடனே கல்பனா, ”இந்தியாவின் பெண்கள் யாருமே இதுவரை விண்வெளிக்கு பறந்ததில்லை. எம்டி செட்டிற்கு இது ஒரு நல்ல உதாரணம் தானே.” என்று அவர் சொன்ன வார்த்தையுடைய உண்மையான விளக்கம், அவர் முதன்முதலில் விண்வெளிக்கு பறந்தபோது நம் அனைவருக்குமே விளங்கியது.

பஞ்சாப் டு அமெரிக்கா

ஏரோஸ்பேஸ் துறையில் தான் தனது வாழ்க்கைக்கான அடுத்தக்கட்டம் இருக்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்த கல்பனா சாவ்லா, பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் பி.டேக் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்தார். 1982ம் ஆண்டில் இளநிலை பட்டத்தை முடித்த கையோடு, கல்பனா அடுத்த அடியை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பதித்தார். டெக்ஸாஸ் மாகாண பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஏரோநாட்டிக்கல் படிப்பை 1984ம் ஆண்டில் முடித்தார். இதற்கிடையே, வானில் பறக்கும் மற்றும் விமானங்களில் அதிக ஆர்வம் கொண்டமையால், தனியாக பறக்கும் பயிற்சிகளை அமெரிக்காவில் எடுத்துக்கொண்டார். பயிற்சிகளை எடுத்துக்கொண்டது மட்டுமின்றி, சான்று பெற்ற பயிற்சியாளராகவும் உருமாறினார். பறக்கும் பயிற்சி நாட்களில், ஜீன் பியர் ஹாரிசன் என்பவரை சந்தித்து 1983ம் ஆண்டில் திருமணமும் செய்துக்கொண்டார். விமான ஓட்டுநர் பயிற்சியாளராக இருந்த ஹாரிசனிற்கும் கல்பனாவிற்கும் இருந்த ஒற்றுமை, விமானங்களின் மீது இருந்த காதலே.

ஆர்வம் மட்டும் போதாது, பிடித்த விஷயத்தில் தேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் என்பதனால், அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் 1988ம் ஆண்டில் ஏரோஸ்பேஸ் துறையில் டாக்டரேட் பட்டமும் பெற்றார். ஏரோநாட்டிக்கல் துறைக்கு உலகளவில் பெயர் கொண்ட இடம் நாசா. அங்கு சேர்ந்து, தனது கனவுகளுக்கு பல பரிமாணங்களை தருவதற்கு கல்பனா நாசாவில் சேர்ந்தார். ஓவர் செட் மெத்தட் (Over Set Method) எனப்படும் குழுவிற்கு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிவேகத்தில் டேக் ஆஃப் செய்யக்கூடிய கோள்களுக்கும், நேர்கோட்டு பாதையில் செலுத்தவேண்டிய கோள்களுக்கும், கணினி முறையிலான திரவியங்கள் (Computational Fluid Dynamics, CFD) பற்றின ஆராய்ச்சி அந்த குழுவின் கீழ் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வரை இந்த ஆராய்ச்சி குழுவில் பணியாற்றிய கல்பனா, முழு அமெரிக்க குடியுரிமை பெற்றபின், நாசாவின் விண்வெளி வீரர் கழகமான (NASA Astronaut Corps) விண்ணப்பித்தார்.

1995ம் ஆண்டில் நாசா இவரது விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், 1996ம் ஆண்டில் கல்பனாவின் முதல் விண்வெளி பயணத்தையும் நிர்ணயித்தது. நவம்பர் மாதம் 1997ம் ஆண்டில் முதல் இந்திய பெண்ணாக விண்வெளியில் பறந்தார் நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தார். இரண்டு வாரம் வரை நீடித்த அந்த பயணத்தில், கிட்டத்தட்ட 10.5 மில்லியன் மைல்கள் பூமியை சுற்றி பயணித்து, இருநூறுக்கும் மேற்பட்ட ஆய்வுகள் விண்வெளியில் நடத்தவும் செய்தார். ”இங்கிருந்து (விண்வெளியிலிருந்து) பார்க்கும் போது தான் தெரிகிறது, நான் எந்த நாட்டை சேர்ந்தவள் என்ற தனிப்பட்ட அடையாளமின்றி, சூரிய குடும்பத்தில் ஒருத்தியாக என்னை அடையாளம் கண்டுகொண்டேன். அங்கிருந்து எல்லாமே அழகாகவும் சிறியதாகவும் இருந்தது. அந்த சிறு புள்ளியில் நாம் இருக்கிறோம் என்பதை அப்போது உணர்ந்தேன்.” என்று தன முதல் விண்வெளி பயணத்தின் அனுபவங்களை அப்போது பகிர்ந்துகொண்டார்.

2000ம் ஆண்டில் கல்பனா நாசாவால் இரண்டாவது பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2002ம் ஆண்டு வரை தள்ளிப்போயிருந்தது. ஜனவரி மாதம் 16ம் தேதி 2003ம் ஆண்டில் கல்பனா சாவ்லா மற்றும் ஆறு விண்வெளி வீரர்களை கொண்ட கொலம்பியா குழு STS 107 என்ற செயற்கை கோளில் கிளம்பியது. விண்வெளியிலிருந்து பூமி மற்றும் சூரியனின் அம்சங்களை பற்றியும், பின்னாளில் வரவிருக்கும் வீரர்களுடைய ஆரோக்கிய சூழல் எப்படி இங்கு மாறக்கூடும் என்ற ஆரம்ப நிலை ஆய்வுகளை நடத்தியப்பின், பூமிக்கு திரும்பினர். கடைசியாக குழுவின் நிலையை கல்பனா, ”நாங்கள் வெற்றிகரமாக ஆய்வுகளை முடித்துவிட்டோம்.” என்ற தகவலை நாசாவிற்கு அனுப்பினார். கல்பனாவின் இந்த இரண்டாவது பயணமே, இறுதி பயணமாக மாறியது. பிப்ரவரி மாதம் 1ம் தேதியன்று பூமியின் காற்று மண்டலத்தை அடைந்த ஒரு சில நிமிடங்களிலேயே, STS 107 கோள் வெடித்து சிதறியது. கல்பனாவுடன் இருந்த மற்ற ஆறு விண்வெளி வீரர்களும் அந்த சம்பவத்தில் இறந்தனர். இதில் வருத்தமளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், நாசாவிற்கு கொலம்பியா குழு சென்ற கோள் மீண்டும் பூமியை அடையாது என்று முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. கோளின் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டாலும், பூமியின் காற்று மண்டலத்தின் அழுத்தத்தை அது தாங்காது என்று யூகித்திருந்தனர்.

கல்பனாவின் பெயரை நினைவூட்டும் சில விஷயங்கள்

• கல்பனாவின் கனவை மட்டுமல்ல, அவருடைய சாதனையை என்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் சில விஷயங்களுக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டது.

• நாசாவின் ஒரு சூப்பர் கம்ப்யூட்டருக்கு கல்பனா என்று பெயரிடப்பட்டுள்ளது.

• கல்பனா சாவ்லா பிறந்த இடமான கர்னலில் ஹரியானா அரசாங்கம் 650 கோடி செலவில் மருத்துவ கல்லூரி இவருடைய நினைவாக திறந்து நடத்தப்பட்டு வருகிறது.

• நியூ யார்க் நகரின், ஜாக்சன் ஹயிட்ஸ் என்ற இடத்தின் 74வது தெருவிற்கு கல்பனா சாவ்லா தெரு என்று பெயரிடப்பட்டுள்ளது.

• செவ்வாய் கிரகத்தில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட மலைக்கு கல்பனா என்று பெயரிடப்பட்டுள்ளது.

• இந்தியாவின் முதல் வானிலை கோளுக்கு கல்பனா 1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

• செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையே சுற்றிவரும் இயற்கையான கோளுக்கு 51826 கல்பனா சாவ்லா என்றழைக்கப்படுகிறது.

• கர்னல் அடுத்துள்ள குருக்ஷேத்ரா என்ற இடத்திலிருக்கும் கோளரகத்திற்கும் கல்பனா என்று பெயர்.

தன்னுடைய கனவு மற்றும் லட்சியத்தை மட்டும் தொடர்ந்து பின்பற்றி, இறுதியில் அதை நிறைவேற்றிய கல்பனா இந்த பூவுலகில் இல்லையென்றாலும், அவர் பெயரை சொல்லி மேலும் பல வீரர்கள் விண்வெளியை நோக்கி பயணம் செய்துக்கொண்டே இருக்கின்றனர். வாழ்க்கையின் காலம் குறுகியதாக இருந்தாலும் நாம் நினைத்ததை சாதித்து நிரந்தர இடத்தை வரலாற்றில் பெற வேண்டும் என்ற வலிமையான பாடம் கல்பனாவின் வாழ்க்கை மூலம் இளைஞர்கள் பலர் கற்றுக்கொண்டுள்ளனர்.

கட்டுரையாளர்: நித்யா ராமதாஸ்

இவர் குமுதம் சிநேகிதி மாதமிருமுறை இதழில் முழு நேர நிருபராகப் பணியாற்றியவர். புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் தினகரன் நாளிதழில் பயிற்சி நிருபராக இருந்தவர். இவர், லைஃப் ஸ்டைல், ஃபேஷன், கலை மற்றும் மியூசிக் சார்ந்த கட்டுரைகளை எழுதிவதில் தேர்ந்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர், தற்பொழுது கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார்.

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் -1](http://minnambalam.com/k/2017/05/23/1495477820)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் -2](https://minnambalam.com/k/2017/06/01/1496255433)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் -3](https://minnambalam.com/k/2017/06/08/1496860214)

படங்கள் நன்றி: கூகுள் இமேஜ்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *