wதமிழ் சினிமாவுக்கு எல்.கே.ஜி. சொல்லும் பாடம்!

Published On:

| By Balaji

கேபிள் சங்கர்

சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி. எனும் படத்தின் வெற்றி விழாவில் அதன் எழுத்தாளர், நாயகனான ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்திற்கு சம்பளம் கூட வாங்காமல் நடித்திருப்பதாகவும், லாபத்தில் பங்கு வாங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டு நடித்ததாகவும் சொன்னார். படத்தின் பட்ஜெட் சுமார் மூன்று கோடி + விளம்பரம் இத்யாதிகள் எல்லாம் சேர்ந்தால்கூட நாலு கோடிக்கு மேல் ஆகாது. முதல் மூன்று நாள் வசூல் மட்டும் சுமார் ஒன்பது பளஸ் என்கிறார்கள். விநியோகஸ்தர் பங்கு சுமார் 50 சதவிகிதம் என்று வைத்துக்கொண்டாலும் போட்ட காசு வந்தாகிவிட்டது. தயாரிப்பாளர் தரப்பிலும் திரையரங்க உரிமைகள் விற்றாகிவிட்டது. டிஜிட்டல், எப்.எம்.எஸ். மற்றும் இதர விற்பனை உரிமங்களை விற்றதில் இரண்டு பங்கு லாபம்தான். நிச்சயம் ஆர்.ஜே. பாலாஜிக்கு இது நல்ல விஷயம். முதல் படத்தில் சம்பளமாய் இந்தத் தொகை கேட்டிருந்தால் யாரும் தந்திருக்க மாட்டார்கள்.

இதுபோல ஏன் மற்ற நடிகர்களும் செய்யக் கூடாது என்று பலர் கேள்வி கேட்டிருந்தனர். தெலுங்கில் பல பெரிய நடிகர்கள் அட்வான்ஸ் மட்டும் வாங்கிக்கொண்டு, படத்தின் வியாபாரத்தைப் பொறுத்துத் தங்களுக்கான பங்கை வாங்கிக்கொள்கிறார்கள். இந்தியில் ஆமிர் கானும் அப்படித்தான் வாங்குகிறார். ஹாலிவுட்டில்கூட அம்மாதிரி ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொள்ளும் ஹீரோக்கள் அதிகம். நிச்சயம் தங்களுடய படம் தரமானதாய் அமையும் என்கிற உறுதி இருக்கும் பட்சத்தில் ஹீரோக்கள் தைரியமாய் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஒரு ஹீரோவுக்குத் தொடர்ந்து ஏழெட்டுப் படங்கள் தோல்வி. அவரிடம் போய் டேட் கேட்டால் சுமார் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார். இன்னொரு நடிகர் இப்போதுதான் ஓரளவுக்கு முகம் தெரியும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். நான்கைந்து படங்களில் நாயகனாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். அவர் சம்பளம் 80 லட்சமாம்.

இவர்கள் எல்லோரும் தங்களது படம் ரிலீஸான முதல் காட்சிக்கு தியேட்டரில் போய் உட்கார்ந்து பார்த்தால் தெரியும் எத்தனை ஆடியன்ஸ் வருகிறார்கள் என்று. தலை எண்ணி பார்க்க வேண்டிய கட்டாயத்தில் முதல் காட்சி நடைபெறும் நிலை அவர்களுக்கு தெரிந்தால்தான் தாங்கள் வாங்கும் சம்பளம் நிஜமாகவே நியாயமா என்று புரியும்.

வசூலைப் பொறுத்து சம்பளம் என்னும் ஏற்பாடு ஏன் இங்கே சாத்தியமாவதில்லை என்ற கேள்விக்கு பதிலைத் தேடினால் நம் தமிழ் சினிமா துறையின் நேர்மையின்மைதான் முக்கியமான காரணமாக நிற்கும்.

பிரபல நடிகர் ஒருவரின் படம் சமீபத்தில் வெளியானது. அதன் வசூலைப் பற்றி அந்த நடிகரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் ட்விட்டரில் வெளியாகும் செய்திகளையே சொல்லிக்கொண்டிருந்தார். உண்மையான வசூல் விவரம் அவருக்குத் தெரியவில்லை. சமூக வலைதளங்களில் வரும் பாராட்டு, வசூலாக மாறும் என்கிற நம்பிக்கை அவரிடம் நிறைய இருந்தது. கொஞ்சம் பொறுமையாய் அவரிடம் பேசி, அப்படத்தின் வசூல் என்ன என்பதை சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களிடம் பேசவைத்து அவருக்குப் புரியவைத்தேன். அது தெரிந்ததும், நமக்கே இத்தனை சம்பளம் கேட்டா எப்படி கட்டுப்படி ஆகும் என்று தன்னையே கேள்வி கேட்டுக்கொண்டார்.

சரி இனிமேல் அம்மாதிரி சம்பளம் கேட்க மாட்டேன் என்று அவர் முடிவெடுப்பார் என்று நீங்கள் நினைத்தீர்களானால் அது தவறு. அவருக்கு அப்படிப்பட்ட எண்ணம் இருந்தாலும் அதைச் செயல்படுத்த முடியாது. காரணம் அவர் ஏற்கனவே நடித்த படங்களிலிருந்து வர வேண்டிய தொகையே கோடிகளில் இருந்தது. படம் ஓடவில்லை, வசூல் ஆகவில்லை எனப் பல ‘இல்லை’கள் சொல்லிக் கடைசி நேரத்தில் காசைக் கொடுக்காமல் டபாய்த்தவர்கள் அதிகம். இப்படிப்பட்ட நிலை இருப்பதால், எதற்குத் தேவையில்லாமல் கணக்கு வழக்கு பார்த்துக்கொண்டு… நல்லதோ கெட்டதோ, காசை எடுத்து வை, நான் நடிச்சிட்டு போறேன் என்று முடிவெடுக்கிறார்கள்.

தவறு தயாரிப்பாளரிடம்கூட இல்லை. ஒரு படம் எத்தனை ரூபாய்க்கு வியாபாரம் ஆகிறது, அதில் மீடியேட்டர் கமிஷன் போக எவ்வளவு கையில் வரும், சாட்டிலைட், டிஜிட்டல், எப்.எம்.எஸ். எவ்வளவு என்பன போன்ற விஷயங்கள் அக்ரிமெண்ட்டில் வந்துவிடும். தியேட்டரில் எவ்வளவு என்று கேட்டீர்களானால் தயாரிப்பாளருக்க்குக்கூடச் சரியாகத் தெரியாது. குத்து மதிப்பாய் விநியோகஸ்தர் சொல்லும் கணக்குத்தான். அவருக்கும்கூட தியேட்டர்காரர்கள் கொடுக்கும் கணக்கு எத்துனை துல்லியம் என்று தெரியும். அதோடு மட்டுமில்லாமல் முந்தைய வாரமோ, முந்தைய மாதமோ தியேட்டர் ஷேரை வசூல் செய்ய வேண்டிய நிர்பந்தம் இருக்கும் பட்சத்தில் ஒரு மாதிரி அட்ஜஸ்ட்மெண்டில்தான் அவர்களும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி அடிப்படையில் நேர்மையில்லாத கணக்கு வழக்கு இருக்குமிடத்தில் எப்படி சதவிகித அடிப்படையில் நடிப்பது என்று நடிகர்கள் யோசிப்பது ஒரு விதத்தில் நியாயம்தான் என்றே தோன்றுகிறது.

கணக்கு வழக்கு சரியில்லாத எந்தத் தொழிலிலும் நேர்மையை யாரிடமும் எதிர்பாக்க முடியாது.

[உள்ளூர் கேபிள் டிவி சேனல்களும் புதுப் படங்களும்](https://minnambalam.com/k/2019/03/06/53)

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share