நடப்பு நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் இந்தியாவின் தங்கம் இறக்குமதியில் 5 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏப்ரல் – ஜனவரியில் மொத்தம் 26.93 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது 2017-18 நிதியாண்டின் ஏப்ரல் – ஜனவரி மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட 28.23 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை விட 5 சதவிகிதம் குறைவாகும். சர்வதேசச் சந்தையில் தங்கம் விலைச் சரிவு காரணமாகவே இறக்குமதி மதிப்பு குறைந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தங்கம் இறக்குமதியில் சரிவு ஏற்பட்டிருந்த நிலையில், ஜனவரி மாதத்தில் 38.16 சதவிகித உயர்வுடன் மொத்தம் 2.31 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2017-18 நிதியாண்டில் அளவு அடிப்படையில், மொத்தம் 955.16 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. 2016-17ஆம் ஆண்டில் இதன் அளவு 780.14 டன்னாக மட்டுமே இருந்தது.
தங்கம் இறக்குமதியைப் போலவே, நகை மற்றும் ரத்தினங்கள் இறக்குமதியும் ஏப்ரல் – ஜனவரியில் சரிவடைந்துள்ளது. இக்காலகட்டத்தில் நகை மற்றும் ரத்தினங்கள் இறக்குமதி மதிப்பு 4 சதவிகிதம் குறைந்து 32.9 பில்லியன் டாலராக இருந்துள்ளது.�,