ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஐக்கிய இடதுசாரி கூட்டணியைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றுள்ளனர்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தேர்தல் கடந்த 14ஆம் தேதி நடைபெற்றது. கடந்த ஆண்டு 58 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் இம்முறை 76.8 சதவிகித வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியபோது தங்களுடைய பிரதிநிதி இல்லாமலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியதாக பாஜக ஆதரவு பெற்ற ஏ.பி.வி.பி. சங்கம் குற்றம் சாட்டியது. சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகளை தூக்கிச்செல்ல இரு வேட்பாளர்கள் தரப்பிலும், முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.
பின்னர் நேற்று இரவு தொடங்கிய வாக்குப் எண்ணிக்கையின் முடிவுகள் இன்று (செப்டம்பர் 16) அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தலைவராக சாய் பாலாஜி (2161 வாக்குகள்), துணைத் தலைவராக சரிகா சௌத்ரி(2692 வாக்குகள்), பொதுச் செயலாளராக அஜ்ஜாஸ் அகமத் ராத்தெர்(2423 வாக்குகள்), இணை செயலாளராக அமுதா ஜெயதீப்(2047 வாக்குகள்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே ஐக்கிய இடதுசாரி கூட்டணியைச் சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மாணவர் தேர்தலில் ஏ.ஐ.எஸ்.எஃப் அமைப்பின் கூட்டணி இல்லாமலேயே இடதுசாரி கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், இம்முறை ஏ.ஐ.எஸ்.எஃப் அமைப்பு இடதுசாரி கூட்டணியில் இடம் பெற்றது அக்கூட்டணிக்கு மேலும் வலுவைச் சேர்த்தது. இதன் காரணமாக தேர்தலில் அக்கூட்டணி எளிதாக வெற்றி பெற முடிந்தது.
அண்மையில் நடைபெற்ற டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் ஏ.பி.வி.பி வெற்றி பெற்ற நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தேர்தல் அடைந்த தோல்வி அந்த அமைப்பிற்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.
�,