ஜிஎஸ்டியை அமல்படுத்தியதற்காக ’சேஞ்ச் மேக்கர் ஆஃப் தி இயர்’ விருதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கைகளால் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பெற்றுக்கொண்டார்.
*பிசினஸ் லைன்* ஊடகத்தின் சார்பில் ’சேஞ்ச் மேக்கர் ஆஃப் தி இயர்’ விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று (மார்ச் 15) டெல்லியில் நடைபெற்றது. ஜிஎஸ்டி அமலாக்கத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் மன்மோகன் சிங் கைகளால், ஜிஎஸ்டியை அமல்படுத்தியதற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு ’சேஞ்ச் மேக்கர் ஆஃப் தி இயர்’ விருது இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் மிகவும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
ஜிஎஸ்டி தவறான முறையில் அவசர கதியில் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், வரி விதிப்பு நிலைகள் ஏற்கத்தக்கதாக இல்லை எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ப.சிதம்பரம், மன்மோகன் உள்ளிட்டோர் குறைகூறிவிட்டு இப்போது விருது வழங்குவது நியாயமா என சமூக வலைதளவாசிகள் கிண்டலடித்துள்ளனர். ஆனால் அந்த நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு எதிராகவே மன்மோகன் சிங் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், “அரசு நிறுவனங்களின் கட்டாயப்படுத்தும் செயல்கள் இந்திய வர்த்தகர்களிடம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும். வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் அரசுகளிடமும் சந்தேகத்தை உண்டாக்கும். அதிகாரிகளின் நிர்ப்பந்தத்தை எதிர்கொள்ளும் நிலை எந்த வர்த்தகருக்கும் உண்டாகக் கூடாது. அது காலப்போக்கில் எதிர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும். அரசு சர்வாதிகார மனப்போக்குடன் மாற்றத்தை மக்கள் மீது திணிக்க முடியாது. சவால்களுக்கு எதிராக புத்தாக்கத்தை ஊக்கப்படுத்தும்போது சமூகம் வளர்ச்சியும், மேம்பாடும் அடையும். அரசின் கொள்கையில் புத்தாக்கச் சிந்தனை மற்றும் கருத்து ஒற்றுமை இல்லையென்றால் வெற்றி பெற முடியாது. நாம் ஜனநாயகப் பாதையைத் தேர்வு செய்திருக்கிறோம். இதில் சர்வாதிகாரப் போக்குடன், மாற்றங்களைத் திணிக்க இடமில்லை” என்று ஜிஎஸ்டி அமலாக்கத்தை மறைமுகமாகச் சாடினார்.�,