wசெயின் பறிப்பு கும்பலின் தலைமையிடம் சென்னை?

Published On:

| By Balaji

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் செல்போன், செயின் கொள்ளையடிப்பவர்களின் தலைமையிடமாகச் சென்னை இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு, கடலூர் வட்டாரத்தில் வீட்டு வாசலிலும் வீதியிலும் நடந்து சென்ற பெண்களின் நகைகளைப் பறித்தது ஒரு கும்பல். இரண்டு பல்சர் பைக்கில் அவர்கள் சுற்றித் திரிந்தது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, செயின் பறிப்பு செய்த மூன்று முக்கியக் குற்றவாளிகளைப் பிடித்துச் சிறைக்கு அனுப்பியுள்ளனர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார். போலீஸாரின் விசாரணையில், சென்னையைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் மற்றும் கடலூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் செயின் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

செயின் பறிப்பு கும்பலைக் கைது செய்தது எப்படி என்று அறிய களத்தில் இறங்கினோம்.

திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளிமோட்டான் வீதியில் ஜோதி என்ற பெண்மணியின் தாலி செயினைப் பறித்தனர் திருடர்கள். வண்டிப்பாளையம் பகுதியில் வீட்டு வாசலில் நின்றிருந்த அகிலாபிரியா என்பவரின் தாலி செயினையும் பறித்துக்கொண்டு தப்பித்தனர். ஒரே நாளில் இந்த இரண்டு சம்பவங்களும் நடந்தன. செயின் பறித்தவர்களைப் பிடிப்பதற்காக, இன்ஸ்பெக்டர் உதயக்குமார், சப்இன்ஸ்பெக்டர் பரணி மற்றும் டெல்டா டீம் சப்இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீஸ் படை மின்னல் வேகத்தில் தேடுதலில் இறங்கியது.

சில தினங்களுக்கு முன்பு, கடலூர் புதுநகர் எல்லைக்குட்பட்ட செம்மண்டலம் பகுதியில் ஒரு பெண்ணின் செயினை அறுக்க முயற்சி செய்தபோது, பைக்கில் வந்த இருவரில் ஒருவன் தனது செல்போனைத் தவறவிட்டான். அதேபோல வெள்ளிமோட்டான் வீதியில் செயினைப் பறித்தபோதும், அதில் ஈடுபட்ட ஒருவனின் செல்போன் வீதியில் விழுந்துவிட்டது. இரண்டு செல்போன்களும் போலீஸாரின் விசாரணைக்குப் பெரும் உதவியாக அமைந்தன.

ஒரு செல்போனில் ‘அக்கா’ என்று பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு அழைப்பு விடுத்தனர் போலீஸார். எதிர்முனையில் இருந்த பெண் ஒருவர், ‘நிவேக்.. நிவேக்’ என்று அழைத்தார். “நீங்க என்ன ஊரும்மா, நிவேக் சாலை விபத்தில் அடிபட்டு சீரியஸாக கடலூர் ஜி.ஹெச்ல இருக்கார்” என்று போலீஸார் சொல்ல, தாங்கள் கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியில் வசிப்பதாகக் கூறினார் அந்தப் பெண்.

திருட்டில் ஈடுபட்டவரின் குடும்பத்தினரை விசாரணை செய்வதற்காக, போலீஸார் மப்ட்டியில் அரசு மருத்துவமனையில் காத்திருந்தனர். அரை மணி நேரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஒருவரது உறவினர்கள் அங்கு வந்தனர். அவர்களைச் சுற்றிவளைத்தனர் போலீஸார். காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்ததில், இரண்டு குற்றவாளிகளின் பெயர் தெரிந்தது. அதன்பின், சென்னை ஈசிஆர் சாலையில் சென்ற பைக் குறித்து மரக்காணம் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கப்பட்டது.

மரக்காணம் போலீஸார் சுங்கச்சாவடி அருகில் காத்திருந்தபோது, அந்தத் திருடர்கள் பைக்கை

வேகமாகி ஓட்டித் தப்பித்தனர். அவர்களை போலீஸார் விரட்டிச் சென்றதால், அங்குள்ள காட்டுப்பகுதியில் பைக்கை விட்டுவிட்டுத் தப்பித்துவிட்டனர். இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான குழுவினர், மரக்காணத்தில் கிடந்த பைக்கை மட்டும் எடுத்து வந்தனர். அவர்கள் பின்னால் சென்ற டெல்டா டீம், பைக்கை விட்டுவிட்டுத் தப்பித்துப்போன சுரேஷ் மற்றும்

சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் பிடித்தனர். அவர்கள் தந்த தகவலால், நிவேக் என்ற நிவேக்குமாரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி சிக்கிக்கொண்டார்.

செயின் திருட்டு குறித்து நிவேக் கூறியதாவது:

“சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள சுரேஷ் எனது உறவினர். அவர் வீட்டுக்குப் போகும்போது, ரபிக் உடன் அறிமுகம் ஏற்பட்டது. நான் சென்னைக்குப் போகும்போது, அனைவரும் ஜாலியாக செலவு செய்வார்கள், பணத்துக்குப் பஞ்சமிருக்காது. பிறகுதான், அவர்கள் செயின், செல்போன் பறிப்பில் ஈடுபட்டு ஈசியாக பணம் சம்பாதிப்பது தெரியவந்தது. சமீபத்தில், சென்னையிலிருந்து சுரேஷ், சுரேஷ்குமார், ரபிக் மூவரும் கடலூர் சிங்காரத்தோப்பில் உள்ள எனது வீட்டுக்கு வந்தனர். இரவு முழுவதும் ஜாலியாக குடித்துவிட்டு, போதை இறங்காமலிருக்க கஞ்சா புகைத்தோம். மறுநாள் , இரண்டு பைக் எடுத்துக்கொண்டு புதுச்சேரி எல்லையில் சுற்றினோம். அப்போதுதான், இரண்டு பெண்களின் தாலி செயினை அறுத்தோம். பாதி கைக்கு வந்தது போக, மீதி அவர்களிடமே சிக்கிக்கொண்டது” என்றார் நிவேக்.

சுரேஷ் மற்றும் சுரேஷ்குமார் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் இருந்தன. அவர்கள் இருவரும் சிறையில் இருந்தபோது, ரபிக் நட்பு கிடைத்துள்ளது. சென்னையில் செயின் பறிப்பது, செல்போன் பறிப்பதில் மிகவும் தேர்ந்த குழுவைப் பயன்படுத்தி வந்தார் ரபிக். இவர்கள் அனைவரும் இளைஞர்கள். 20 வயதுக்குட்பட்டவர்கள்.

ரபிக்கின் தலைவனான ரஹ்மான், தற்போது புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். தமிழகம் முழுவதும், இவருக்குப் பரவலாக ஆட்கள் இருக்கின்றனர். புழல் சிறைக்குப்

புதியதாக வரும் இளம் குற்றவாளிகளுக்கு கஞ்சா பழக்கத்தை கற்றுக்கொடுத்து, அவர்களை ஜாமீனில் எடுத்து, செலவுக்குப் பணம் கொடுத்து திருட்டுத் தொழிலில் இறக்கிவிடுவது இவரது வழக்கம் என்று கூறப்படுகிறது. கடலூர் டெல்டா டீம், தற்போது ரபிக் என்பவரைத் தீவிரமாக தேடி வருகிறது. “இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவராகவிருந்தாலும், ரபிக் பெரும்பாலும் காவி வேட்டியில் தான் உலா வருவார். ரபிக், ரஹ்மான் இருவரிடமும் விசாரித்தால், சென்னையிலும் வெளிமாவட்டங்களிலும் செல்போன், செயின் பறிக்கும் கும்பலை வளைத்துவிடலாம்” என்கிறார்கள் விசாரணையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள்.

ஆய்வாளர் உதயகுமாரிடம் செயின் பறிப்புகளைப் பற்றிக் கேட்டோம். “செயின் பறி போனதை மீட்டுவிட்டோம். திருடர்களையும் டூவீலர்களையும் பிடித்துவிட்டோம்.

கூட்டமான பகுதிகளில் செல்லக்கூடிய பெண்கள் கழுத்தில் அணிந்துள்ள செயினுடன் மேலாடையைச் சேர்த்து ஊக்கு (பின்) போடச்சொல்லி விழிப்புணர்வு செய்கின்றனர் போலீஸார். சமீபத்தில் நடைபெற்ற திருவிழாக்களின்போது அவ்வாறு செய்ததால் பெருமளவில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறவில்லை. திருட்டுகளும், பெரும் குற்றங்களையும் தடுக்கும் அளவில் ஏ, பி, சி என்று மூன்று ஷிப்டாக பிரித்து 24 மணி நேரமும் பீட் போட்டுள்ளோம். க்ரைம் போலீஸார் மப்ட்டியில் கண்காணித்து வருகின்றனர். மாவட்ட போலீஸ் மற்றும் அதிகாரிகளின் தீவிரமான உழைப்பால் இதுபோன்ற குற்றங்களை நிச்சயம் கட்டுப்படுத்துவோம்” என்று அவர் நம்பிக்கையை வெளிப்படுத்தினார் எஸ் பி சரவணன்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share