சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்குத் தமிழக அரசே பொறுப்பு என்றும், அது மனிதரால் உண்டாக்கப்பட்ட பேரிடர் என்றும் தனது அறிக்கையில் மத்திய கணக்குத் தணிக்கைத் துறை குறிப்பிட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கண்மூடித்தனமாக நீர் வெளியேற்றப்பட்டதனால், அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது.
2015ஆம் ஆண்டு டிசம்பர் 1, 2ஆம் தேதிகளில் பெய்த கடும் மழையால் சென்னை நகரமே நீரில் மூழ்கியது. டிசம்பர் 4ஆம் தேதியன்று சென்னையில் ஓடும் ஆறுகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக அளவில் நீர் திறந்துவிடப்பட்டதால் அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சென்னை நகரமே வெள்ளக்காடாக மாறியது. மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களை அடையாளம் காண்பதில் அரசுத் துறையினருக்குச் சிரமம் உண்டானது. அவர்களுக்கு உதவும் பொருட்டு, தமிழகம் முழுவதிலுமிருந்து தன்னார்வலர்கள் உதவிகள் செய்தனர்.
இந்த ஒரு வார காலத்தில் 23.25 லட்சம் வீடுகளில் வெள்ளம் புகுந்தது; 289 பேர் இந்தப் பேரிடருக்குப் பலியாகினர். இது இயற்கைப் பேரிடர் என்று அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அறிவித்தது. இந்தப் பேரிடரைத் தமிழக அரசு எதிர்கொண்ட விதம் குறித்து, மத்திய கணக்கு தணிக்கைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி, தி இந்து நாளிதழ் இன்று (ஜூலை 10) செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை வெள்ளமானது மனிதர்களால் உண்டாக்கப்பட்ட பேரிடர் என்றும், இந்தப் பேரிடருக்குத் தமிழக அரசே பொறுப்பு என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய கணக்குத் தணிக்கைத் துறை இது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பித்தது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சியினர் இதுபற்றித் தமிழக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், நேற்று (ஜூலை 9) மத்திய கணக்கு தணிக்கைத் துறையின் அறிக்கையிலுள்ள தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கண்மூடித்தனமாக நீர் திறந்துவிடப்பட்டதால் அடையாற்றில் நீர் வரத்து கடுமையான அளவில் உயர்ந்ததாகவும், அதனால் சென்னையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழக நீர்வளத் துறையானது, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகாரிகளின் மேற்பார்வையில் நீர் வெளியேற்றப்பட்டதாகக் கூறியிருந்தது. இதற்கு மாறாக, நீர்த்தேக்கத்தில் இருந்த பிரிவு அலுவலருக்கும் நீர்வளத் துறை அதிகாரிகளுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லையென்று தெரிவித்துள்ளது மத்தியக் கணக்குத் தணிக்கைத் துறை.
தலைமைப் பொறியாளர் நீர் வெளியேற்றம் குறித்து தகவல் பரிமாற்றம் மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தமிழக நீர்வளத் துறை கூறினாலும், மத்திய நீர் குழுவின் நெறிமுறைகள்படி ஏரிக்கு வரும் நீரின் அளவும் வெளியேற்றப்படும் நீரின் அளவும் ஒழுங்குபடுத்தவில்லை என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக நீர்வளத் துறை செம்பரம்பாக்கம் ஏரியில் 0.268 டிஎம்சி தண்ணீர் சேமிக்க வாய்ப்பிருந்த நிலையில், டிசம்பர் 1ஆம் தேதியன்று 3.377 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனால் அன்றைய தினம் ஏரியிலிருந்து வெளியேறும் நீரின் அளவானது 12,000 கன அடியிலிருந்து 20,960 கன அடியாக உயர்த்தப்பட்டது. இந்த நடவடிக்கை 21 மணி நேரம் தொடர்ந்ததால் மட்டுமே அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது; அதனால் கடும் பாதிப்பு உண்டானதாகக் கூறியுள்ளது மத்தியக் கணக்குத் தணிக்கைத் துறை. அதன் பின், அந்த ஆற்றைத் தூர் வாரும் பணியைத் தமிழக நீர்வளத் துறை செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது.
மத்திய நீர்க் குழுவின் நெறிமுறைகள் இருந்தாலும், செம்பரம்பாக்கம் ஏரிக்கான கட்டுப்பாட்டு விதிமுறைச் சுருக்கமானது மீளாக்கம் செய்யப்படவில்லை. அடையாற்றில் நீர் திறந்துவிடப்பட்டபோது, அவசரகாலச் செயல்திட்டம் ஏதும் தமிழக அரசினால் திட்டமிடப்படவில்லை. சுமார் 13 மணி நேரம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்த நீர் வரத்தைக் காட்டிலும், அடையாற்றில் வெளியேற்றப்பட்ட நீரின் அளவு மிக அதிகமாக இருந்தது. இதனால் அணை உடையாமல் பாதுகாக்கப்படும் என்ற கருத்து இருந்தாலும், அடையாற்றில் ஏற்கனவே வெள்ளம் அதிகமிருந்தது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இது தொடர்பாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பதிலளித்த தமிழக அரசு, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்பட்ட நடவடிக்கையானது விதிமுறைக் கட்டுப்பாட்டுச் சுருக்கத்தைப் பின்பற்றியே இருந்தது என்றும், அவசரகாலச் செயல்திட்டத்தை வடிவமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன என்றும் தெரிவித்தது.
ஆனால், இந்தக் கருத்துகளை ஏற்க முடியாது என்று தனது அறிக்கையில் மத்தியக் கணக்குத் தணிக்கைத் துறை கூறியுள்ளது. 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் சென்னையில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது; செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்த்தேக்கம் கட்டப்பட்டு 23 ஆண்டுகள் ஆன நிலையிலும் அதன் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை; தமிழக நீர் வளத் துறை தெரிவித்த பதில் மூலமாக இதனை நிரூபிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது மத்தியக் கணக்குத் தணிக்கைத் துறை.�,