�
சென்னையை அடுத்த மாமண்டூரில் 3,500 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பாட்டில் இருக்கிறது. அதிக மக்கள் அடர்த்தி கொண்ட சென்னையில் விமானப் போக்குவரத்துக்கு உள்ள அதிகமான தேவையை உணர்ந்து இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது. கே.ஜி.எஸ். டெவலெப்பர்ஸ் நிறுவனம் இதற்கான ஒப்பந்தத்தைப் பெற்று, அரசின் இறுதிக்கட்ட ஒப்புதலை எதிர்நோக்கியுள்ளது. 3,500 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.4,500 கோடி முதலீட்டில் இந்த விமான நிலையம் அமைக்கப்படுகிறது. விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான இடத்தையும், இதர பரிசோதனைகளையும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் முடித்துள்ளது.
இதுகுறித்து கே.ஜி.எஸ். டெவலெப்பர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான ஜிஜி ஜார்ஜ் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் பேசுகையில், “இந்த விமான நிலையத்தை அமைப்பதற்கு முதற்கட்டமாக 100 மில்லியன் டாலர் முதலீட்டுக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம். இந்த விமான நிலையம் 2023ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இது 2 கோடி விமானப் பயணிகளைக் கையாளும் திறனைக் கொண்டிருக்கும். ஜிஎஸ்டி சாலை மற்றும் ரயில்வே பாதைக்கு மத்தியில் இந்த விமான நிலையம் அமையவுள்ளதால் மக்களுக்கு ஏதுவாக இருக்கும். இரண்டு ஓடுதளங்கள் இந்த விமான நிலையத்தில் இருக்கும்” என்றார்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையம் ஆண்டுக்கு 2.1 கோடி விமானப் பயணிகளைக் கையாளும் திறனைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,