wசென்னையின் நீர்த் தேவைக்கு எளிமையான தீர்வு!

Published On:

| By Balaji

நரேஷ்

சிறப்புத் தொடர்: சென்னைக்குச் செய்ய வேண்டியது என்ன? – 15

சென்னையில் ஒரு குடும்பம் மெட்ரோ தண்ணீரையும், கேன் தண்ணீரையும், லாரி தண்ணீரையும் வேண்டாம் என்று புறந்தள்ளிவிட்டு, தூய்மையான நீரைத் தங்கள் இல்லத்திலேயே உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? என்னால் நம்ப முடியவில்லை. நேரில் சென்று பார்க்கலாம் என்று கிளம்பினேன்.

ஊடகத்திலிருந்து வந்திருக்கிறேன் என்றவுடன், அந்தப் பகுதி மக்கள் சூழ்ந்துகொண்டு தண்ணீர் லாரிகள் குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கினார்கள். தண்ணீர் லாரி டிரைவர்கள் அதிகமாகப் பணம் கேட்கிறார்கள், முறையாக சப்ளை செய்வதில்லை, பக்கத்துத் தெருவில் வண்டியை மறித்துத் தண்ணீர் திருடுகிறார்கள் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.

ஒரு வாரம் தண்ணீர் லாரி வரவில்லை என்றால், அந்தப் பகுதியில் பிரளயமே நடந்துவிடும் போல் இருந்தது. மேற்கு சைதாப்பேட்டையின் எல்லைப் பகுதியிலிருந்த அந்தக் குடியிருப்பில் வசிக்கும் வாகன வசதியுள்ள சிலர், கிண்டி தொழிற்பேட்டையில் இருக்கும் சென்னை மாநகரின் நீர் விநியோகக் கிடங்குக்கு வந்து லாரிகளில் மிச்சமாகி வரும் நீரைப் பிடித்துக்கொண்டு செல்கிறார்கள். இதற்காகவே 10 சதவிகிதம் நீரை மிச்சப்படுத்தி எடுத்துவந்து சில்லறைக் காசுகளுக்குக் கொடுக்கிறார்கள் லாரி ஓட்டுநர்கள்.

இப்படிப்பட்ட நீர் நெருக்கடி மிகுந்த பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் மாநகராட்சியின் எந்த நீர் ஆதாரத்தையும் நம்பாமல் வாழ்கிறார்கள் என்பதும் தங்களுக்கான நீரைத் தாங்களே உற்பத்தி செய்துகொள்கிறார்கள் என்பதும் நினைத்துக்கூட பார்க்க முடியாததாக இருந்தது. அவர்கள் பெரிய செல்வந்தர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணத்துடன் கொடுக்கப்பட்ட முகவரிக்கு வந்து சேர்ந்தேன்.

வந்த இடத்தில் மிகச் சாதாரணமான அடுக்கு வீடு ஒன்று இருந்தது. சந்தேகத்துடன்தான் உள்ளே நுழைந்தேன். அடுத்து அங்கே பார்த்தவையெல்லாம் அற்புதங்கள்தான்!

குடிநீர் தேவை, சமையலறைத் தேவை, கழிவறைத் தேவை என்று எதற்கும் அவர்கள் மாநகராட்சியையோ, தண்ணீர் லாரிகளையோ நம்பவில்லை. அவர்களுக்கான நீர்த் தேவைகள் யாவும் அந்த வீட்டின் சுற்றுச் சுவர்களுக்குள்ளேயே அறுவடை செய்யப்படுகின்றன. நிச்சயமாக அவர்கள் நிலத்தடி நீரை உறிஞ்சவில்லை. மாறாக, மழை நீரை அறுவடை செய்தார்கள். அறுவடை என்பதே உற்பத்திதானே! மேலும், உற்பத்தி செய்த நீரை சேமித்துப் பயன்படுத்தத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

6,000 லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு தொட்டியை நிலத்துக்கடியில் அமைத்து, நிலத்துக்கு மேல் வானிலிருந்து வரும் நீரைக் கட்டட வடிவமைப்பின் வழி வரவழைத்து, குழாய்கள் மூலம் தொட்டியில் சேமிக்கிறார்கள். ஒரே ஒரு முறை சராசரியாக மழை பெய்தால், அக்குடும்பத்துக்கு ஒரு வருடத்துக்குத் தேவையான நீர் தயார். மிகவும் சாதாரணமான ஒரு மழை நீர் சேகரிப்புத் தொட்டி, இப்படியோர் அட்சய பாத்திரமாக விளங்குமா என்று மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

இதற்கு நிறைய இடம் வேண்டும், கட்டமைப்புக்கு அதிகம் செலவாகும், பராமரிப்பது சிரமம் என்பவர்களுக்குப் பதில் சொல்வதுபோன்றே உரையாடினார்.

“இந்தத் தொட்டிக்காக எனக்கு எக்ஸ்டிரா இடமெல்லாம் தேவைப்படல தம்பி. இந்தா, நீங்க நிக்குறதே அந்தத் தொட்டி மேலதான்” என்று தொட்டியைத் திறந்து காட்டினார். வீட்டின் முகப்பில் வாசலுக்கு அடியில்தான் அந்தத் தொட்டி அமைந்திருந்தது. வீட்டின் கட்டமைப்புடன் சேர்த்தே வடிவமைக்கப்பட்டிருந்ததால், ஒரு காணி நிலம்கூட அதிகமாகத் தேவைப்படவில்லை.

“இதுக்கு நான் 10,000 ரூபா செலவு பண்ணேன் தம்பி. வீடு கட்டும்போது தேவையில்லாத ஆடம்பர அலங்காரங்களுக்குச் செலவு செய்யறோம்,. டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின்னு எல்லாமே இந்த மழை நீர் சேகரிப்புத் தொட்டியைவிட அதிகமான விலைதான். அழிஞ்சுபோற பொருளுக்கு அவ்வளவு காசு குடுத்து வாங்குறோம். தலைமுறையையே வாழவைக்கிற திட்டத்தைச் செய்ய மனசில்லை. இந்தத் தெருவே தண்ணீ லாரி வந்தா பரபரத்து அடிச்சுக்கும். ஆனா, நான் சொகுசா உக்காந்து பேப்பர் படிச்சிட்டு இருப்பேன். அப்புறம் பராமரிக்கிறதெல்லாம் பெரிய வேலை என்பாங்க. இந்தக் கட்டமைப்புக்கு நான் செய்யுற பராமரிப்பு என்ன தெரியுமா தம்பி? வீட்டை சுத்தமா வெச்சுக்கிறதுதான். வாரத்துக்கு ஒரு தடவை மாடியைக் கூட்டி சுத்தம் பண்ணி வெச்சா போதும். வீட்டைச் சுத்தமா வெச்சுக்குறதைவிட வேறென்ன பெரிய வேலை இருக்கப்போகுது?” என்று விடைகொடுத்தார். வியப்பாகத்தான் இருந்தது.

படங்களில் இருப்பதுபோல மிக எளிமையான கட்டமைப்புதான் இது. எவ்வளவு சாதாரணமான ஒரு முன்னெடுப்பு! இது ஒன்றும் ஆகப்பெரிய சாதனையல்ல. மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துவது என்னும் மிகச் சாதாரண தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்நிலத்துக்கு மிகப் பெரிய சேவையைச் செய்து கொண்டிருக்கிறார், பெயர் தெரிவிக்க விரும்பாத அந்தப் பெரியவர்.

“பேரு, முகவரி எல்லாம் போடாதீங்க தம்பி. அப்புறம் ஒரே தொல்லையாயிடும். அவங்கவங்க நினைச்சா இதைவிட அருமையா தற்சார்பா இருக்கலாம். வந்து பார்த்து, கேள்விகேட்டு, பெருமூச்சு விட்டுட்டுப் போறவங்கதான் அதிகம். செய்யணும்னு நினைக்கிறவன் செஞ்சிடுவான் தம்பி. சோம்பேறிங்கதான் அடுத்தவன் என்ன பண்றான்னு பார்த்து பம்மிட்டு போயிடுவான். அதனாலதான் இப்போல்லாம் நான் பேட்டியே கொடுக்கிறதில்ல.”

அவர் சொன்ன மிக முக்கியமான தொழில்நுட்பத் தகவல்களைப் பதிவு செய்வது இன்றியமையாதது. பெரிதாக ஒன்றுமில்லை, பெய்யும் மழை நீரைக் குழாய்கள் மூலம் தொட்டிக்குக் கொண்டுவரும்போது வடிகட்டிய பின் தொட்டிக்குள் விட வேண்டும். குப்பைகள் இல்லாத மழை நீரைத் தொட்டிக்குள் நிறைத்த பிறகு, மிச்சம் இருக்கும் குப்பைகளும் இயற்பியல் விதிப்படி தொட்டிக்கு அடியில் படிந்துவிடும். 6 மாதத்திற்கு ஒரு முறை தொட்டிகளைச் சுத்தப்படுத்தினால் போதுமானது.

அடுத்ததாக மழை சேமிப்புத் தொட்டிக்குள் சூரிய ஒளியும், காற்றும் புகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வளவு எளிமையான நீர் சேகரிப்பு தொழில்நுட்பம், குறிப்பிட்ட குடும்பத்தை மட்டும் பாதுகாப்பதுடன், சூழலைச் சுரண்டுவதையும் தடுக்கிறது.

இன்றே, இந்த விடுமுறையிலேயே இப்பணியைச் செய்துவிடுங்கள். வருங்காலமும் வாழும் உயிர்களும் உங்களை வாழ்த்தும். சென்னைக்கு எவ்வளவு பெரிய வறட்சி வந்தாலும், தேக்கி வைக்கப்பட்ட தேன் அமுதம் உங்களைக் காப்பாற்றும்.

இதைவிட மிகப்பெரிய தொழில்நுட்பத் திட்டம் ஒன்றை பல கோடி ரூபாய் செலவில் மாநகராட்சி மாங்கு மாங்கென்று செய்துவருகிறது. சென்னையின் தெருக்களில் இருக்கும் வடிக்கால்கள் சுத்தப்படுத்தப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்தில் சென்னை மாநகரின் ஒவ்வொரு தெருவுக்கும் மாநகராட்சியின் துப்புரவுத் தொழிலாளர்கள் வந்து பணிசெய்து கொண்டிருப்பதை நாம் பார்க்காமல் கடந்து வந்திருப்போம். மனிதக் கழிவுகள் நிறைந்த சாக்கடை வடிகால்களுக்குள் இறங்கி மனிதக் கைகளாலேயேதான் அவை ஆழப்படுத்தப்பட்டன. பாதுகாப்பு உடைகள் என்ற பெயரில் ரேடியம் கலந்த ஆரஞ்சு வண்ண கோட் ஒன்றைப் போட்டுக்கொண்டு, கால்சட்டைகூட அணியாமல்தான் அவர்கள் அக்கால்வாய்களுக்குள் இறங்குவார்கள்.

அரசாங்கம் அவர்களுக்கான பாதுகாப்பு உடைகள் வழங்கவில்லை என்ற அரசியல் பேச வரவில்லை. யதார்த்தம் என்னவென்றால், அதுபோன்ற உடைகளை அணிந்துகொண்டு அந்தக் குழிகளுக்குள் இறங்கினால் அவர்களுக்கு மூச்சு முட்டும். குறைந்த அளவிலான ஆடைகளைக் கொண்டே அவர்களால் அப்பணியைச் செய்ய முடியும். இந்தச் சுகாதார வேலை சுத்தமாக நடக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள அந்தந்தப் பகுதிகளின் ஜே.ஈ.க்கள், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வந்து ஆய்வு செய்துவிட்டுச் செல்கிறார்கள்.

இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட கால்வாய்களின் கழிவுகள், நீர் நிறைந்திருக்க வேண்டிய நீர் நிலைகளில் கொட்டப்படுகின்றன. சுத்தம் செய்யப்பட்ட வடிகால்கள் வழியாகப் பெய்யும் மழை நீர் மாநகரின் முக்கியச் சாக்கடைகளில் (அதாவது ஆறுகளில்) கலந்து கடலில் கரைந்துவிடுகிறது.

இதுதான் மழைநீருக்கான ஆகச் சிறந்த நவீன தொழில்நுட்பத் தீர்வு. அவர்களிடம் பேசிப் பயனில்லை. மக்களிடம் நேரடியாக, உடனடியாகச் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி விவாதிப்பது நம் கடமையாகிறது.

அவ்வகையில் இரண்டு முக்கியமான தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன.

(தீர்வை நோக்கிய தேடல் தொடரும்..)

முந்தைய கட்டுரை: [சிறப்புத் தொடர்: கபாடிவாலாக்களைக் கண்டுபிடியுங்கள்!](https://minnambalam.com/k/2018/11/04/22)�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share