Wசிவகார்த்தி பிறந்தநாள் ஸ்பெஷல்!

Published On:

| By Balaji

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு பொன்ராம் இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஜோடியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தென்காசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இந்தப் படத்தின் [பர்ஸ்ட் லுக் போஸ்டர்](https://twitter.com/Siva_Kartikeyan/status/964568406526541824) சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகியுள்ளது. சீமராஜா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரில் குதிரையில் மஞ்சள் வண்ணக் கொடி பிடித்து சிவகார்த்திகேயன் வலம்வருகிறார்.

சமந்தா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் சூரி, நெப்போலியன், சிம்ரன், லால் ராஜேந்திரன், மனோபாலா, யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவுள்ள இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கவுள்ளார். சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் உருவாகவுள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “கதையை கேட்டதும் ரகுலுக்கு மிகவும் பிடித்துப்போனது. இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் இதுவாகும். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் கதை. சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் அவர் இதற்கு முன் நடித்ததில்லை” என்று கூறியுள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தையும் 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்கிறது. சமீபத்தில், படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியது. ஜூன் அல்லது ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் தற்போது ஆரம்பகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share