வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் மற்றும் பொன்ராம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை 24AM நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் பணிகள் ஜூன் 17 அன்று பூஜையுடன் தொடங்கியது. சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன் என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த தகவலை 24AM நிறுவனம் நேற்று ( ஜூன் 27) பத்திரிக்கையாளர்களிடம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்திலும் இந்த அறிக்கை பகிரப்பட்டுள்ளது. அதில், கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் திரையுலகில் ஜாம்பவானாக திகழும் சன் நெட்வொர்க்குடன் 24AM நிறுவனம் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டணியின் இதற்கு முந்தைய இரண்டு படங்களும் ரசிக்கும்படியான திரைக்கதை, காமெடி, பாடல்கள் எனச் சிறப்பாக அமைந்து பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றது. அந்த பார்முலா இந்த படத்திலும் கண்டிப்பாக இருக்கும் என்பது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள கலைஞர்களை வைத்தே யூகிக்க முடிகிறது. காமெடி, பாடல், சினிமா என அனைத்திற்கும் தனித்தனி சேனல்கள் வைத்திருக்கும் சன் நெட்வொர்க்குக்கு இந்த படம் முக்கியமான படம் என்பதில் சந்தேகமில்லை. இந்த படத்தில் பாகுபலி 2 படத்தில் பணியாற்றிய கமலகண்ணன் VFX மேற்பார்வையாளராகப் பணியாற்றுகிறார். மேலும் ஸ்டண்ட் கலைஞர் அனல் அரசு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் முத்துராஜ் ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.
சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து வரும் வேலைக்காரன் படத்தையும் ஆர்.டி.ராஜாவே தயாரிக்க மோகன் ராஜா இயக்கிவருகிறார். வரும் செப்டம்பர் 29ம் தேதி வேலைக்காரன் படம் திரைக்கு வரவுள்ளது.�,”