சுமார் 1,600 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.689 கோடி கடனுதவி வழங்க பஞ்சாப் நேஷனல் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையினருக்கு உதவும் வகையில், சென்ற ஆண்டின் நவம்பர் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் சிறப்புக் கடன் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 59 நிமிடங்களில் கடன்களுக்கான ஒப்புதல் அளிக்கப்படுவதால் சிறு நிறுவனங்கள் துறையினரிடையே இத்திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திட்டத்தின் கீழ் www.psbloansin59minutes.com என்ற இணையதளம் வாயிலாக ரூ.1 கோடி வரையிலான கடன்களுக்கான ஒப்புதல்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் பேங்க், இத்திட்டத்தின் கீழ் சிறு நிறுவனங்களுக்குக் கடன் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநரான சுனில் மேத்தா, *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “2018 நவம்பரில் பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய கடன் திட்டத்தின் கீழ் சிறு நிறுவனங்கள் எளிதாகக் கடன் பெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் (பிப்ரவரி மாத இறுதி வரையில்) 1,600 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.689 கோடி கடன் வழங்க எங்களது வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், முத்ரா யோஜனா கடனுதவித் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 2.69 லட்சம் சிறு நிறுவனங்களுக்கு நாங்கள் கடனுதவி வழங்கியுள்ளோம்” என்றார்.
59 நிமிட கடன் திட்டத்தின் கீழ் பேங்க் ஆஃப் பரோடா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, விஜயா பேங்க், இந்தியன் பேங்க் உள்ளிட்ட வங்கிகளும் கடன் வழங்கி வருகின்றன.�,