1989 நவம்பர் 15. எதிரணி – பாகிஸ்தான். இடம் – கராச்சி. 16 வயது 205 நாட்களே நிரம்பிய ஒரு இளைஞர் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். கிரிக்கெட் உலகின் அடுத்த இரு தசாப்தங்களையும் அந்த 16 வயது இளைஞர்தான் ஆளப் போகிறார், அவரது பெயரைத்தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உச்சரிக்கப் போகிறது, தங்களின் ஒப்பற்ற வீரனாகக் கருதி இந்தியர்கள் உச்சி முகரப்போகிறார்கள் எனும் விஷயம் அப்போது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் எனத் தெரியவில்லை.
ஆம், சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்து வைத்த தினம் இன்று. சுவாரஸ்யமான விஷயமாக 2013இல் இதே நாளில்தான் சர்வதேச கிரிக்கெட்டில் தனது கடைசி இன்னிங்ஸ் பேட்டிங்கையும் அவர் விளையாடவேண்டியிருந்தது. 24 ஆண்டுக்காலம் தங்களை மகிழ்வித்த, பெருமைப்படுத்திய மகத்தான ஒரு வீரர் தனது கடைசி போட்டியை விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு போட்டி நடந்த மூன்று நாட்களுமே சச்சின்… சச்சின்… என்ற குரல்தான் அரங்கம் முழுக்க ஒலித்துக்கொண்டிருந்தது.
சச்சின் கிரிக்கெட்டிற்கு அறிமுகமான இந்நாளையொட்டி வழக்கம்போலவே பல ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் இன்று சச்சினுக்கு வாழ்த்துக் கூறிவருகின்றனர். தங்களுக்கு மிகவும் பிடித்தமான சச்சினின் குறிப்பிட்ட போட்டிகளைக் குறித்தும் பகிர்ந்துவருகிறார்கள்.
இந்நிலையில் சச்சினும் இந்நாள் குறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், “இந்தியாவுக்காக களமிறங்கிய இந்தத் தினம் ஒவ்வொரு ஆண்டு வரும்போதும் பல பழைய நினைவுகளைக் கொண்டுவரும். இந்தியாவுக்காக 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியதைப் பெருமையாகக் கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சச்சினைப் போலவே ‘பிசிசிஐ’யும் ஒரு பதிவை இட்டுள்ளது. அதன் ட்விட்டர் பதிவில் 1989ஆம் ஆண்டு சச்சின் பேட்டிங் செய்யும் புகைப்படத்தையும், 2013இல் அவர் கடைசியாக பேட்டிங் செய்யக் களத்தில் இறங்கியபோது எடுத்த புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து வெளியிட்டுள்ளது. இந்தப் பதிவுகள் சமூக வலைதளங்களில் தற்போது கவனம் பெற்றுவருகின்றன.
�,”