�
கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்தது. எனவே, போர்வெல் போடவும், இருக்கும் போர்வெல்களை ஆழமாக்கும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் போர்வெல் பம்ப்செட்கள் விற்பனையும், உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கோவையில் பம்ப்செட் உற்பத்தி கடந்த ஒரு மாதமாக வழக்கத்தைவிட 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மணிராஜ் கூறுகையில், “கோவையில் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தினமும் ரூ.30 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் பம்ப்செட்கள் விற்பனையாகியுள்ளன. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தினமும் 20 ஆயிரம் என்றளவில் பம்ப்செட்கள் விற்பனையாகி வருகின்றன. இதனால் தினசரி விற்பனை ரூ.30 கோடியிலிருந்து ரூ.40 கோடியாக அதிகரித்துள்ளது. அடுத்து பருவமழை பெய்யும்வரை இதே அளவில் விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.
இந்தியாவில் உற்பத்தியாகும் பம்ப்செட்களில் 65 சதவிகிதம் அளவு கோவையில் உற்பத்தியாகிறது. இங்கு உற்பத்தியாகும் பம்ப்செட்களில் பாதிக்குமேல் வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விற்பனையாகிறது. ஜனவரி முதல் ஜுன் வரையிலான மாதங்கள் பம்ப்செட் விற்பனை மற்றும் உற்பத்தி சீசனாகும். இந்த மாதங்கள் கோடை மாதங்களாக உள்ளதால் வீட்டு உபயோகம், விவசாய நீர் இறைப்பு உள்பட பல்வேறு பயன்பாடுகளுக்கு பம்ப்செட் அதிகளவில் விற்பனையாகும்.�,