இனிப்பு அடை, உப்பு அடை செய்வது எப்படி?
இன்று காரடையான் விரதம். காரடையான் விரதம் என்பது கணவனின் நீடித்த ஆயுளை வேண்டிப் பெறும் நோன்பாகவே பெரும்பாலும் சொல்லப்பட்டுவருகிறது. ஆனால், அது மட்டுமே இதன் பயனன்று. ஒரு பெண்ணுக்குப் புகுந்த வீடும் பிறந்த வீடும் இரு கண்கள். அந்த இரு வீடுகளும் சகல செல்வங்களையும் பெற்றுச் செழிக்கச் செய்யும் ஒரு விரதமாகவே காரடையான் விரதம் அமைகிறது.
காரடையான் நோன்பு வழிபாட்டின்போது இனிப்பு அடை, உப்பு அடை என இரு வகையான உணவுகளைப் படைத்து வழிபடுகின்றனர் நம் பெண்கள்.
**இனிப்பு அடை:**
என்ன தேவை?
பச்சரிசி (மாவாகப் பதப்படுத்தியது) – 1 கப்
காராமணி (தட்டை பயிறு) – கால் கப்
பொடித்த வெல்லம் – முக்கால் கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்
ஏலக்காய் – 3 (பொடித்துக் கொள்ளவும்)
தண்ணீர் – 2 கப்
எண்ணெய் – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
முதலில் பச்சரிசியை அரை மணிநேரம் ஊறவைக்கவும். பின் வடித்துக்கொள்ளவும். தண்ணீர் நன்கு வடிந்தவுடன் மிக்ஸில் போட்டு அரைத்துக்கொள்ளவும். பின் வாயகன்ற பாத்திரத்தில் மாவைப் போட்டு வறுக்கவும். நன்கு வறுத்தபின் மாவைச் சல்லடையில் போட்டு சலித்துக்கொள்ளவும்.
காராமணியை (தட்டை பயிறு) வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதைத் தண்ணீர் விட்டுக் குழைய வேகவைக்கவும். பின் காராமணியில் உள்ள தண்ணீரை வடித்துவிடவும்.
இரண்டு கப் தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தில் வடிகட்டிய வெல்லக் கரைசலைக் கொதிக்க வைக்கவும். அதனுடன் குழைய வேகவைத்த காராமணி, தேங்காய்த் துருவல், பொடித்த ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும். அத்துடன் பதப்படுத்திய பச்சரிசி மாவைச் சிறிது சிறிதாக கலவையில் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
மாவுக்கலவை நன்கு சுருண்டுவரும். அதை இறக்கி மிதமான சூடு இருக்கும்போது கைகளில் எண்ணெயைத் தடவி மாவுக் கலவையில் சிறு உருண்டை எடுத்து வடை போல் தட்டவும்.
இந்த வடைகளை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வைக்கவும். இவ்வாறே எல்லா மாவையும் தட்டவும். அதை இட்லிப் பானையில் வைத்து அவித்து எடுக்கவும். சுவையான காரடையான் நோன்பு இனிப்பு அடை தயார்.
**உப்பு அடை:**
என்ன தேவை?
பச்சரிசி (மாவாகப் பதப்படுத்தியது) – 1 கப்
காராமணி (தட்டை பயிறு) – கால் கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 கப்
இஞ்சி – சுண்டு விரல் அளவு
பச்சை மிளகாய் – 3 (சிறு துண்டுகளாக்கவும்)
தாளிக்க:
நல்ல எண்ணெய் – 4 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
**எப்படி செய்வது?**
முதலில் பச்சரிசியை அரை மணிநேரம் ஊறவைக்கவும். பின் வடித்துக்கொள்ளவும். தண்ணீர் நன்கு வடிந்தவுடன் மிக்ஸில் போட்டு அரைத்துக்கொள்ளவும். பின் வாயகன்ற பாத்திரத்தில் மாவைப் போட்டு வறுக்கவும். நன்கு வறுத்தபின் மாவைச் சல்லடையில் போட்டு சலித்துக் கொள்ளவும்.
காராமணியை (தட்டை பயிறு) வெறும் வாணலியில் போட்டு, சிவக்க வறுக்கவும். பின் அதை தண்ணீர் விட்டுக் குழைய வேகவைக்கவும். பின் காராமணியில் உள்ள தண்ணீரை வடித்து விடவும். இஞ்சியைத் தோல் நீக்கி சுத்தம் செய்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையைத் தண்ணீரில் அலசி உருவிக்கொள்ளவும்.
வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் அரைத்த இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரில் தேவையான உப்பைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பின் அதனுடன் குழைய வேகவைத்த காராமணி, வதக்கிய இஞ்சி – பச்சை மிளகாய் கலவை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
மாவுக்கலவை நன்கு சுருண்டுவரும். அதை இறக்கி மிதமான சூடு இருக்கும்போது கைகளில் எண்ணெயைத் தடவி மாவுக் கலவையில் சிறு உருண்டை எடுத்து வடை போல் தட்டவும்.
இந்த வடைகளை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வைக்கவும். இவ்வாறே எல்லா மாவையும் தட்டவும். அதை இட்லிப் பானையில் வைத்து அவித்து எடுக்கவும். சுவையான காரடையான் நோன்பு உப்பு அடை தயார்.
**குறிப்பு:** விருப்பமுள்ளவர்கள் வேகவைத்த காராமணியை மிக்ஸியில் லேசாக அரைத்துக்கொள்ளலாம்.
**சிறப்பு:** இந்த அடைகளுடன் உருக்காத வெண்ணெய் வைத்துப் படைப்பார்கள்.
**என்ன பலன்?**
உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாக இருப்பது உடலில் தேங்கும் கழிவுகளே. விரதம் மேற்கொள்வதால் உடல், கழிவுகளை நீக்கிவிடும். மேலும், உடலில் உள்ள ரத்தக் குழாய்களில் தங்கியுள்ள அழுக்குகள், கசடுகளை நீக்கிவிடும். தொண்டை, இதயம், ரத்தம் தூய்மையடையும். உணவு உண்ணாதபோது உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைப்பதால் அந்த நேரங்களில் தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும். இப்படி விரதம் இருக்கும் நேரத்தில் கிடைக்க வேண்டிய உடலுக்கான சக்திகளை உடனடியாகக் கொடுக்கக்கூடிய உணவுகள் சில உள்ளன. அந்த உணவுகளில் குறிப்பிடத்தக்கவை, இந்த நோன்பு அடைகள்!�,