தெலங்கானா சட்டப்பேரவைக்கான தொகுதி பங்கீட்டை விரைவில் இறுதி செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ) கெடு விதித்துள்ளது.
தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா தேர்தல் களத்தில் டிஆர்எஸ், காங்கிரஸ், தெலுங்குதேசம் மற்றும் பாஜக ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. காங்கிரஸ், தெலுங்கு தேசம், சிபிஐ, மற்றும் தெலங்கானா ஜன சமதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடப்போவதாக சில வாரங்களுக்கு முன்பாக அறிவித்தன.
எனினும், தொகுதி பங்கீடு தொடர்பாக இந்த கூட்டணியில் சிக்கல் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் 100 இடங்களில் போட்டியிட விரும்புகிறதாம். இதர கட்சிகளுக்கு வெறும் 19 சீட்டுகள்தான் என்கிற பிடிவாதம் அக்கட்சிகளை அதிருப்தி அடைய வைத்திருக்கிறதாம். தெலுங்குதேசம் மற்றும் தெலங்கானா ஜன சமிதி ஆகியவை 30-க்கும் அதிகமான இடங்களில் போட்டியிட விரும்புகின்றன. இதனால் இக்கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி பிடிஐ ஊடகத்திற்கு நேற்று அளித்த பேட்டியில், “அவர்களுக்காக (காங்கிரஸ்) நாங்கள் காத்திருக்க முடியாது. அக்டோபர் 21ஆம் தேதி எங்கள் கட்சியின் மாநில குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பதை அப்போது முடிவு செய்வோம்” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே, 12 தொகுதிகளுக்கான பட்டியலை காங்கிரஸ் கட்சியிடம் சிபிஐ கொடுத்துள்ளது. “ஒன்றிரண்டு தொகுதிகளை குறைவாக பெற்றுக்கொள்ளவும் நாங்கள் தயாராகவுள்ளோம்” என்றும் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தெலங்கானா காங்கிரஸ் தரப்பு, “கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தொகுதி பங்கீட்டை விரைவில் இறுதி செய்வோம்” என்று தெரிவித்துள்ளது.�,