நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் ஜூலை 22ஆம் தேதி வரை கர்நாடக சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் நேற்று (ஜூலை 19) மாலை 6 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜுபாய் வாலா கடிதம் எழுதியிருந்தார். ஆனாலும், நேற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி காலக்கெடு விதித்து ஆளுநர் எழுதும் கடிதங்களுக்கு எதிராக முதல்வர் குமாரசாமி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதைத்தொடர்ந்து, ஜூலை 22ஆம் தேதியன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் என்று சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு குமாரசாமி பரிந்துரைத்தார்.
குமாரசாமி பேசுகையில், “எல்லா எம்.எல்.ஏக்களும் வீட்டுக்குச் செல்ல விரும்புகின்றனர். திங்களன்று (ஜூலை 22) நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம்” என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், அந்த கோரிக்கைக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா பேசுகையில், “முதலமைச்சருக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை முடித்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இன்றைக்குள் வாக்கெடுப்பை முடிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் பேசிக்கொண்டே போவார்கள். நாங்கள் அமைதியாக இருக்க வேண்டுமா?” என்று கேள்வியெழுப்பினார்.
பின்னர் பாஜக எம்.எல்.ஏ ஜகதிஷ் ஷெத்தார், “நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்றே நடந்திருக்க வேண்டும். இன்றைய அஜெண்டாவிலும் நம்பிக்கை வாக்கெடுப்பு இருக்கிறது. ஆளுநர் ஏற்கெனவே கேள்வியெழுப்பியுள்ளார். சட்டமன்றக் கூட்டத்தொடர் ஜூலை 26ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எம்.எல்.ஏக்களுக்கு பேச உரிமை இருந்தாலும் இது சிறப்புக் கூட்டம். இன்றே முடிவெடுக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அதன்பின் பேசிய துணை முதல்வர் பரமேஷ்வரா, “நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளோம். நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் ஆளுநரால் உத்தரவுகளை வெளியிடவோ, காலக்கெடு விதிக்கவோ முடியாது” என்று தெரிவித்தார்.
அப்போது பேசிய சபாநாயகர், “உச்ச நீதிமன்றத்திற்கும், மக்களுக்கும், அவைக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பாதுகாப்பு கோரி எந்த எம்.எல்.ஏவும் எனக்கு கடிதம் எழுதவில்லை. அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனரா என எனக்குத் தெரியவில்லை”என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து பேசிய எடியூரப்பா, “சபாநாயகரே நாங்கள் உங்களை மதிக்கிறோம். இன்று வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். எங்கள் தரப்பு எம்.எல்.ஏக்கள் இன்று நள்ளிரவு வரை அமைதியாக அமர்ந்திருப்பார்கள். எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. நாங்கள் ஆளுநரின் உத்தரவை மதிக்கிறோம். நாங்கள் ஒத்துழைக்கிறோம். ஆளுநரின் உத்தரவுக்கு மதிப்பளிக்கும்படி முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.
பின்னர், ஜூலை 22ஆம் தேதி காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. ஜூலை 22ஆம் தேதியன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**
**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”